உயிர் எழுத்து ஜூலை இதழ் கவிதைகள்

1.
என் கவிதைகளில்
முகமற்ற யாரோ ஒருவன்
ரகசியமாக உலவிக் கொண்டிருப்பதாக
நீ சொல்கிறாய்.

என் கவிதைகளில் உள்ள
கடல்களில்
படகுச் சவாரி
மேற்கொள்ளும் உல்லாச பயணியாக
இருக்கலாம்.
அல்லது மீனவனாகவும்.

31வது பக்க கவிதையிலுள்ள
மலை உச்சியில் வசிக்கும்
ஆதி மனிதனாககூட இருக்கலாம்.

ஒருவேளை மதியகாட்சி
டிக்கட் கிடைக்காமல்
சும்மா எட்டிப் பார்க்க வந்திருப்பானோ?

என் கவிதைகளின்
தோற்றுவாய்கள்
மிகவும் குறுகலாக இருப்பதாக
அவன் முறையிடுகிறான்.

என் கவிதைகளில் வசிப்பது
மிகவும் கடினமானதெனவும்.

என் கவிதைகளில் மலர்ந்திருக்கும்
ஒரேயொரு நித்ய கல்யாணி பூவை
அவன் எதிர்கொள்ளும் போது
அவனிடம் பதற்றங்கள் கூடுகிறது.

பிறகு வேறொரு கவிதையில்
பெய்யும் மழையில்
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான்.

இப்போது
அவன் பொருட்டு
பெய்கிறது
எனது எல்லா கவிதைகளிலும்
பெருமழை.

———————

2.
வழமையான ஒரு திங்கள் கிழமை அன்று
எந்த ஆரவாரமும் இன்றி
பூத்தது
பொழுது சாயும் போது
அந்த
பெயரற்ற மலர்.

கீழ்வானமும்
கடலும்
கலந்தார் போலிருந்த
அதன் வர்ணமோ
இதிகாச மீன்காரியிடமிருந்து
பெற்று வந்தது போலிருந்த
அதன் வாசமோ
விசேஷமாக
யாருடைய கவனத்தையும் கவரவில்லை.

சில நூறாண்டுகள்
வேர் பிடித்து
வளர்ந்து மலர்ந்த
அதன் தொன்மை
குறித்து
யாரிடமும் எந்த வியப்போ
விசனமோ இல்லை.

அது வெளியட காத்திருந்த ரகசியங்கள்
யாருக்கும் எந்த பதற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை.

அதன் பிறகு வந்து போன
எந்த திங்கள் கிழமையிலும்
பூக்கவில்லை
அது போல ஒரு மலர்.
—————————

3.
வெள்ளை
நீலம்
பச்சை
இளஞ்சிவப்பு
என்று எல்லா நிறங்களிலும்
வரையப்பட்ட
காகங்களை
ஒவ்வொன்றாய்
பறக்கவிட்ட பிறகு
அவன் மெதுவாக
வரையத் தொடங்குகிறான்,
காகிதத்திலிருந்து
விடுபட முடியாத
கறுப்பு நிற காகத்தை.
—————————–
4.
எல்லா பொம்மைகளும்
சலித்த பிறகு
அவனுக்கு
ஒரு கடவுளை பரிசளிக்கிறேன்.

கடவுள் உருவாக்கித் தரும்
பிரபஞ்சத்தில்
அவன் பொருட்டு பெய்யும் மழை.

அவன் சுட்டும் திசையில் உதிக்கும்
சூரியன்.

சிறு நாற்காலி அசைவில் கண்டங்கள் கடக்கிறான்.
குவளை நீர் கொட்டி அருவியை செய்கிறான்.
கலர் பேனாக்கள் உதிர்த்து பூக்களை வளர்க்கிறான்.

எல்லா விளையாட்டுகளும் சலிக்கும் போது
கடவுள் அவனுக்கு போதிக்கத் தொடங்குவார்
பிரபஞ்சத்தின் ரகசியத்தை.

அவருக்கு அவன் சூட்டியிருக்கும்
பெயரை அப்போது
கடவுளிடம் சொல்லிக் கொள்ளலாம்.

—————————————————
5.
அவன் சொல்லும் கதையில்
நரியின் நிறம் கருப்பு,
காகத்திற்கு பல்வேறு நிறங்கள்.

பிடிவாதமாக
காகத்தின் நிறத்தை மாற்ற மறுக்கும்
அவன் சொல்கிறான்,
பாட்டி சுடும் அப்புச்சி குள்ளமெனவும்
நரி வடை போல இருப்பதாகவும்.

ஆயிரம் ஆண்டுகளின் சலிப்பு சுமந்த
பாட்டியும் நரியும் காகமும்
இயல்பாக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

“எனவே உமது பாவங்கள் நிலைக்கின்றன..” – பைபிள்

ஆமென் புத்தக மதிப்புரை – கவிதா முரளிதரன்

மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஆமென் தன்வரலாறு நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டையொட்டி கடந்த ஜனவரி சென்னை வந்திருந்தார் புத்தகத்தை எழுதிய சிஸ்டர் ஜெஸ்மி. ஆங்கிலத்தில் அந்த நூலை ஏற்கனவே படித்திருந்ததால் அவரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. எளிமையான ஒரு சுடிதாரில், பார்த்தவுடன் பிடித்துப்போகும் இயல்புடையவராக இருந்தார். அவருடன் இருந்த பத்து நிமிடங்களும் பேச்சும், உற்சாகமும் சிரிப்புமாகவே கழிந்தது. “நேற்று ரயிலில் சில கன்னியாஸ்திரிகளைப் பார்த்தேன், என்னைப் பார்த்து முணுமுணுப்பாக பேசிக் கொண்டு வந்தார்கள். அனேகமாக எனது புகைப்படத்தை எதாவது ஊடகத்தில் பார்த்திருப்பார்கள்” என்று சிரித்தபடியே சொன்னார்.

பொறாமையாலும் சூழ்ச்சியாலும் அத்துமீறல்களாலும் வல்லுறவுக்கான பிரயத்தனங்களாலும் நெய்யப்பட்ட அவருடைய 33 வருட துறவு வாழ்க்கையில் இதுபோன்று ஒரு முறையாவது அவர் வாய்விட்டு சிரித்திருப்பாரா என்று கேட்கத்தோன்றியது.

17 வயதில் துறவு வாழ்கை மேற்கொள்வதற்கான ‘தேவ அழைப்பு’ வந்ததில் தொடங்கி 33 வருடங்கள் கழித்து ‘மனநிலை பிறழ்ந்தவள்’ என்கிற பட்டத்திலிருந்து நூலிழையில் தப்பித்து துறவு வாழ்விலிருந்து வெளியேறுவது வரையிலான சிஸ்டர் ஜெஸ்மியின் துறவு அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட தன்வரலாறு, ஆமென்.

உலகின் மிகப்பெரிய, சக்தி வாய்ந்த மத நிறுவனத்தின் இந்தியப் பதிப்பிற்குள் நடக்கும் ரகசிய அவலங்களை தனது எழுத்துக்களின் மூலம் எளிமையாக வடியவிடும் போது சிஸ்டர் ஜெஸ்மி ஏற்படுத்தும் தாக்கம் தீவிரமானது. மதம் சார்ந்த, துறவு சார்ந்த பல ஆழமான சமூக நம்பிக்கைகளை ஆமென் அடியோடு சிதைக்கிறது.

‘தேவனுக்கான அர்ப்பணிப்போடு தொண்டு செய்யும்’ உள்ளங்களிடையே நிலவும் கசப்பும் காழ்ப்புணர்ச்சியும் அதன் பொருட்டு அங்கு மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியும் சதியுமேகூட ஒரு சாதாரண வாசகருக்கு இருக்கக்கூடிய சர்ச் பற்றிய மதிப்பீடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது.

இவைபோக, சர்ச்சில் மிகச் சாதாரணமாக நடக்கும் பாலியல் ஒழுக்க மீறல்களைப் பற்றி சிஸ்டர் ஜெஸ்மியின் விவரணைகள் வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துபவை. ஆனால் புதியவை அல்ல. கத்தோலிக்க சர்ச் மிகத் தீவிரமாக இருக்கும் கேரளாவில் சர்ச்சுக்குள் நிகழும் பாலியல் ஒழுக்க மீறல்கள் (பாலியல் ஒழுக்கத்தை மிகத் தீவிரமாக கடைபிடிக்கும், வலியுறுத்தும் ஒரு நிறுவனம் சர்ச் என்பதால் இங்கு பாலியல் ஒழுக்க மீறல் என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருக்கிறது) பற்றி நாம் ஏற்கனவே ஓரளவு அறிந்ததுதான். 1992ல் கோட்டயத்தில் 19 வயது கன்னியாஸ்திரி சிஸ்டர் அபயா கொல்லப்பட்டதற்கு காரணமே சர்ச்சுக்குள் நடக்கும் பாலியல் பிரச்னைதான் என்று ஊடகத்தில் செய்திகள் வெளியாகின. இரண்டு பாதிரியார்களோடு ஒரு மூத்த கன்னியாஸ்திரி உறவில் இருந்ததை சிஸ்டர் அபயா பார்த்துவிட்டதால் அவர் கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியானது. இது போல அரசல் புரசலாக, பெரிய அளவில் ஆதாரங்களின்றி வெளியாகும் சர்சுக்குள் நடக்கும் அத்துமீறல்கள் பற்றிய செய்திகளின் விரிவான தொடர்ச்சியாகவே சிஸ்டர் ஜெஸ்மியின் தன் வரலாறை வைத்துப் பார்க்கலாம்.

“பரிசுத்த முத்தங்களால் எல்லா சகோதரர்களையும் வாழ்த்துவீராக” என்கிற பைபிளின் வாசகத்தின் அடிப்படையில் கன்னியாஸ்திரிகளிடம் முத்தம் கேட்கும், கொடுக்கும் பாதிரியார், சுயபாலின மோகம் கொண்ட சக கன்னியாஸ்திரி, ஒரு கன்னியாஸ்திரியின் கர்ப்பப்பையை நீக்கியபிறகு ஆறுதலடையும் சுப்பீரியர், உடல்ரீதியான தேவைகள் பற்றி போதனை செய்து உடைகள் களையும் பாதிரியார் என்று சிஸ்டர் ஜெஸ்மியின் தன்வரலாறு நெடிகிலும் பயணிப்பவர்கள் ‘சர்ச்சுக்கேயுரிய பாலியல் அறங்களை’ தொடர்ந்து மீறுபவர்களாகவே இருந்து வருகிறார்கள். காலம் காலமாக சர்ச் விதித்து வரும் கடுமையான பாலியல் கட்டுப்பாடுகளை எளிமையாக, குற்றவுணர்வுகளின்றி, தமக்குரிய நியாயங்களோடு மீறுகிறார்கள் சிஸ்டர் ஜெஸ்மியின் தன்வரலாறில் பயணிக்கும் கன்னியாஸ்திரிகளும் பாதிரியார்களும்.

தீவிர பாலியல் கட்டுப்பாட்டை (sexual repression) மேற்குலகத்தின் பல அடிப்படை பிரச்னைகளுக்கு காரணமாகச் சொல்கிறார்கள் சிக்மண்ட் பிராய்ட் போன்ற தத்துவவியலாளர்கள். “நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை?” என்ற புகழ்பெற்ற ஒரு கட்டுரையில் பாலியல் குறித்த சர்ச்சின் அணுகுமுறைகள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார் அறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். “ஒழுக்கத்தை போதிப்பதன், வலியுறுத்துவதன் மூலம் எல்லாவிதமான மக்களின் மீதும் தேவையற்ற ஒரு துயரத்தை சுமத்துகிறது சர்ச்” என்கிறார் அவர். பாலியல் குறித்த ஆரோகியமற்ற, இயற்கைக்கு விரோதமான அணுகுமுறைதான் கிறிஸ்துவ மதத்தின் மிக மோசமான அம்சம் என்கிறார் ரஸ்ஸல். பாலியல் குறித்த சர்ச்சின் வெறுப்பு தேவையற்றது மட்டுமல்ல, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் கூட என்பது ரஸ்ஸலின் வாதம்.

அந்த வாதத்தில் உண்மை இருப்பதை சிஸ்டர் ஜெஸ்மியின் தன்வரலாறு மிகத் தெளிவாக வாசகர்களுக்கு விளக்குகிறது.

சிஸ்டர் ஜெஸ்மியின் நூலில் வெளிப்படும் இன்னொரு விஷயம், சர்ச்சில் நிலவும் பாலின பாகுபாடுகள். கன்னியாஸ்திரிகளுக்கு விதிக்கப்படும் பல விதிகள் பாதிரியார்களுக்கு தளர்த்தப்படுகிறது. கன்னியாஸ்திரிகளுக்கென சீருடை இருக்கிறது. பாதிரியார்களுக்கு இல்லை. பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கன்னியாஸ்திரிகளுக்கு யேசுவே கணவர்.  சர்ச்சில் எடுபிடி வேலைகளை கன்னியாஸ்திரிகள்தான் செய்ய வேண்டும்.

பெண்களை ஒடுக்க மதம் ஒரு ஆயுதமாக காலம்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கிறிஸ்துவமும் விதிவிலக்கல்ல. சூனியக்காரிகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பெண்கள் எரித்துக் கொல்லப்படுவதை பார்த்த, அனுமதித்த பாதிரியார்களின் செய்கைகளின் தொடர்ச்சியாகவே இன்று அவர்கள் கன்னியாஸ்திரிகளை பல்வேறு முறைகளில் நிர்பந்தப்படுத்துவதை பார்க்க வேண்டியிருக்கிறது. பாலியல் ஒழுக்க மீறல் என்பது உள்பட பல்வேறு குற்றசாட்டுகளை வைத்து சிஸ்டர் ஜெஸ்மி துறவறத்திலிருந்து விலகும் போது அவருக்கு மனநோயாளி என்கிற பட்டத்தை கட்டி தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள எல்லா பிரயத்தனங்களையும் செய்கிறது சர்ச்.

ரேமண்ட் லாரன்ஸ் என்கிற பாதிரியார் 1985ல் எழுதிய ஒரு கட்டுரையில் “சர்ச்சுகள் கூடிய சீக்கிரமாகவே பாலியல் ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கான இடமாக மாறிவிடும், அதைவிட ஆபத்தான விஷயம், அது ஆழமான போலித்தனங்களுக்கான சமூக வெளியாக மாறிவிடும்” என்கிறார்.

இன்று இந்தியாவில் அது நிதர்சனமாகி வருகிறது என்பதற்கு சிஸ்டர் ஜெஸ்மியின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர வேறு என்ன சான்று இருக்க முடியும்?

(நன்றி: புத்தகம் பேசுது, மார்ச் இதழ்)

உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் – துயரம் ஒளிரும் கவிதைகள்/யுகங்கள் கடந்த கொல்லன் பாட்டு

முதல் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது நிகழ்வில் (ஜனவரி 30 அன்று நாகர்கோவிலில் நடந்தது) நான் வாசித்த சிறுகுறிப்பு. தமிழின் முக்கிய கவிஞர்கள் சுகுமாரன், க.மோகனரங்கனுடன் நடுவர் குழுவில் நானும் இருந்தேன் (மன்னன் படத்தில் கவுண்டமணி சொல்லும் தொழிலதிபர்கள் டயலாகை நினைவுப்படுத்திக் கொள்ளாதீர்கள்). இந்த உரையில் இல்லாத, ஆனால் நிகழ்வில் நான் சொன்ன ஒரு விஷயம், நடுவர் குழுவில் இருப்பதற்கான எனது தகுதி நான் ஒரு நல்ல கவிதை வாசகி என்பதுதான்.  பேசி முடித்தவுடன், தாணு பிச்சையாவின் மனைவி வந்து எனது பேச்சு பிடித்திருந்தது என்று சொன்னது நெகிழ்வாக இருந்தது. 

ஆபரண அழகாக, கௌரவமாக, பகட்டாக, ஆடம்பரமாக, சொத்தாக பல சமயங்களில் ஒரு பெண்ணின் வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக இதுவரை தமிழ்சூழலில் பிரதிநிதித்துவம் பெற்று வந்த தங்கத்தை கவிதைகளாக்கிக் காட்டியிருக்கும் ஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார் தாணு பிச்சையா. தங்கத்தின் மேற்பூச்சு மினுமினுப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை, இவரது கவிதைகள். அந்த மினுமினுப்புக்கு பின்னாலிருக்கும் உழைப்பின் வலிகளை பதிவு செய்கிறது தாணு பிச்சையாவின் கவிமனம்.தாணு பிச்சையா காட்டும் கவியுலகம் தமிழ் படைப்புச் சூழலுக்கு மிக புதிது. அவரது கவிதைகளில் பொன் நம் எல்லோருக்கும் ஜொலிப்பது போல ஜொலிக்கவில்லை.மழைத்துளி போலுள்ள கல்வைத்த தொங்கட்டானை செய்ய மஞ்சாடி கூட தேறாத போது, பொன் வறுமையாக கசங்குகிறது.அக்காக்கள் அம்மாக்களானதும் வழமை போல காணாமல் போகும் போது, பொன் நகைகள் பெருங்கனவுகளாகின்றன.அவள் முகத்திற்கு பொருத்தமாயிருக்குமென அன்று தேர்வு செய்த நடுவில் நீலம் பதித்த மூன்று வரிசைக் கல்கம்மலை கேட்டு பிராயக்காரப் பெண் வரும் போது, பொன் கழிவிரக்கமாகிறது. மூக்குத்திகளுக்கு அழகு சேர்க்கும் மூக்குத்திக்காரிகள் பற்றி பேசும் போது, பொன் காதலாகிறது.சில பவுன்களுக்காய் நிராகரிக்கப்பட்ட பெண்ணை கணவனுடன் பார்க்கும் போது, பொன் பொறாமையாகிறது.தாணு பிச்சையாவின் கவிதையில் வேனற்பொழுதுகூட கங்கினுள் கழன்றுருகும் பொன்னாகவே மினுங்குகிறது. வெறும் நகைகளாக மட்டுமன்றி கஜலெக்ஷ்மி பதக்கத்துக்குள் ஆகாயமாகவும், புஷ்பராக கற்களின் அகவெளிக்குள் காலமாகவும் மாறும் வித்தைகளை நிகழ்த்துகிறது, தாணு பிச்சையா என்கிற கவிதைக் கொல்லன் வடிக்கும் பொன் கவிதைகள். துண்டுதுண்டாய் அறுபட்டு மீன்களோடு மிதந்த நீலம் பாரித்த தச்சனின் தசைககளையும், நள்ளிரவில் நடுங்கவைக்கும் ஆயிரம் பொற்கொல்லர் தலைகளின் பேரோலங்களையும் கவிதைகளுக்குள் கொண்டு வரும் போது தாணு பிச்சையா வாசகர்களுக்குள் கடத்தும் வலி இதுவரை அறியாதது.2006ல் வெளியான பிளட் டைமண்ட் என்கிற ஆங்கிலப் படத்தைப் பார்த்த போது ஒரு பெண் என்கிற முறையில் வைரம் எற்படுத்திய அசூயையும் குற்றவுணர்வையும் தாணு பிச்சையாவின் கவிதைகள் தங்கம் குறித்தும் எனக்குள் ஏற்படுத்துகின்றன.ஆனால் அந்த குற்றவுணர்விலிருந்து என்னை மீட்கும் சூட்சமத்தையும் தாணு பிச்சையாவின் கவிதைகளுள் சில கை கொண்டிருக்கின்றன. தேவதைகளின் அணிகலனாக சிமிக்கியை கொண்டாடும் போதும், பொற்பர வெளிக்கூண்டில் பறக்கும் கிளிகூண்டு சிமிக்கிகளை அணிந்தவளைப் பற்றி பாடும் போதும், முகமறியா பெண்ணின் சிமிக்கியில் நிழலாடும் அவளைப் பற்றி பேசும் போதும் கொல்லனுக்கேயுரிய அழகியலை வெளிப்படுத்துகிறது தாணு பிச்சையாவின் கவிதைகள். வரலாற்றில் எனக்குவாரி வழங்கியதன்மிச்சமெனஅரைஞாண்கயிறாய்இற்றுக்கிடக்குமிந்தமுப்பிரி நூல் மட்டுமே என்று துயரம் தோய பாடினாலும், தாணு பிச்சையாவிற்கு தாத்தா பொன்னை பழக்கிய காலத்திலிருந்து ‘காணும் யாவினுக்குள்ளும் மினுக்கத்தை’ தேடும் மனம் வாய்க்கப்பட்டிருக்கிறது.வெம்மை தணிய பாடும் கொல்லன், யுகங்கள் கடந்த நூற்றாண்டுகளின் மௌனத்தையும் கலைத்துக் கொண்டிருக்கிறான். தமிழ் கவிதைக்கு புதிய திசைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது,  இந்த கொல்லனின் பாடல்.

முத்தத்தின் மீதித் தனிமை

வேண்டாத முத்தத்தையும்

வல்லுறவின் தடத்தையும்

நீக்கும் போது

மழையிடம் இருக்கிறது

அறுவைசிகிச்சை நிபுணரின்

கத்தியையொத்த லாவகம்.

 

பகிர முடியாது அலையும்

முத்தங்களில் கொஞ்சம்

குளிர்ச்சியை சேர்க்கும் போது

மழையிடம் இருக்கிறது

கண்ணீரின் இனிமை..

 

மழையிடம் இருக்கிறது

கடவுளர் பரிமாறிக் கொண்ட

முத்தங்களின் ரகசியங்கள்.

 

மழையின் முடிவில்

எப்போதுமிருக்கிறது,

முத்தத்தின் மீதித் தனிமை…

 

(தினகரன் தீபாவளி மலரில் வெளியானது).

மேலும் சில கவிதைகள்…

1. எனது உலகம்

முத்தங்கள் அற்றது.

தாயிடமிருந்து மகள் பெறும் முத்தமும்

காதலியிடமிருந்து காதலன் பெறும் முத்தமும்

யாரிடமிருந்தோ யாரோ பெறும் முத்தமும்

கானல் நீராகி

மின்னி மறையும்

எனது சுடுவனத்தில்.

அன்றும்

முத்தங்களை பரிமாறிக் கொள்ள முடியாத

இடைவெளி.

எனினும் முத்தத்துக்கு மிக அருகில்

ஒரு உரையாடலை

நிகழ்த்திக்

கொண்டிருந்தேன்.

இலக்கிலாமல் அலைந்து கொண்டிருந்த

எனது கோடிக் கணக்கான முத்தங்களில்

ஒன்று

காற்றின் தீவிரமான அசைவுகளின்

எதோ ஒரு கணத்தில்

உன் உதடுகள் மீது கவியும்.

அதே காற்றில் வீசப்பட்டு

நிராகரிக்கபட்டோ அல்லது

போய் சேராமலோ

அலையும்

வேறொரு முத்தம்

என்னிடம் வந்து சேரும்,

முத்தத்தைவிட

வசீகரமான ஒன்றாக.

——

2 . எனது எல்லைகளை

என்னிடமிருந்து

விடுவித்துக் கொண்டிருக்கிறேன்.

எனது ஆழங்களையும்.

எனது விரிவுகளையும்.

இன்னும் சிற்சிலவற்றையும்.

எல்லாவற்றையும் விடுவித்தது போக

என்னிடம் சில விடுதலைகள்

மிச்சமிருக்கின்றன.

தேவைப்படுகிறவர்கள்

பெற்றுக்கொள்ளலாம்.

———–

3.

உன்னைப் பார்க்கும்போது

பகிரவென

துண்டுக் காகிதங்களில்

சேர்த்து வைத்திருந்த

செய்திகளையும், சுவாரஸ்யங்களையும்

நேசங்களையும் நம்பிக்கைகளையும்

நீ பரிசாக தந்த

துரோகத்தின் நிழலில்

வீசிச் செல்கிறேன்.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு,

துரோகம் தனது நிழலை

மேலும்

படரவிடுகிறது.

———-                                                                                                                                                                                 நன்றி: அடவி, ஜூலை இதழ்.

ஒலக மாநாடு நடத்தும் கலைங்கர்!

செம்மொழி மாநாட்டுக்குச் செல்லும் பேறு பெற்ற பத்து லட்சம் மக்களில், ஐநூறு ஊடகவியலாளர்களில் நானும் ஒருத்தி. மாநாட்டு தொடக்கவிழாவை மட்டும் பார்த்துவிட்டு அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் எனது அசல் திட்டம். அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தினேன். ஆனால் விதி வலியது. தொலைக்காட்சி ரூபத்தில் அது வந்தது. சென்னை வந்து சேர்ந்த அடுத்த நாள் மாநாட்டுக் கவியரங்கம் சன் நியூஸில் நேரடி ஒளிபரப்பு. தமிழச்சி கவிதை வாசிக்கவிருந்ததால் அதை பார்க்க முடிவு செய்தேன். அவருக்கு முன்பே கவிதாயினி கயல்விழி கவிதை வாசித்ததால் அதையும் கேட்க வேண்டியிருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றிய நகைச்சுவை ஒன்றைக் கேள்விப்பட்டிருந்தேன். தாத்தா கலைஞரின் பிறந்த நாள் விழாவில் கவிதை வாசித்த போது அதை எழுதிக்கொடுத்தவர் அவர் நிறுத்த வேண்டிய இடங்களைக் குறிப்பதற்காக ஸ்டாப் என்று எழுதியதாகவும் கயல்விழி அதையும் சேர்த்து வாசித்து விட்டதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். அதற்கு பிறகு உன் கவிதையை நீயே எழுது என்று தாத்தா சொல்லியிருப்பார் போலும். வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார் கயல்விழி. குறிப்பாக கலைஞரை கலைங்கர் கலைங்கர் என்று சொன்னார். கலைங்கர் திருவடி வணக்கம் என்றார்.

கொடுமை என்னவென்றால் கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலேறுவதற்கு முன்பு தயாநிதி மாறனின் தமிழை கேட்கும் பேறு பெற்றேன். ‘ஒலகத் தமிழ் மாநாடு’ என்று உரையைத் துவக்கியவரின் தமிழில் அத்தனை உச்சரிப்புப் பிழைகள்.

முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட எதோவொரு விழாவை தனக்குத் தெரிந்த தமிழில் குஷ்பு தொகுத்து வழங்கிய போது, குஷ்புவையும் தாண்டி தமிழ் தழைக்கும் என்று கமெண்ட் அடித்தாராம் முதல்வர். கயல்விழியையும் தயாநிதியையும் தாண்டி தமிழ் வாழும்தான். ஆனால் மாநாட்டுக்கு சுமார் நானூறு கோடி ரூபாயை செலவு செய்திருக்கும் கலைஞர் அதில் ஒரு சிறு பகுதியை செலவு செய்து மாநாட்டில் பேசவிருப்பவர்களுக்கு தமிழ் உச்சரிப்பு பயிற்சி கொடுத்திருக்கலாம்.

சிறு வெளிச்சம்…

எனக்குத் தெரியும்.

உனது பதற்றங்களில்

நிறைந்திருப்பது

பகிர முடியாத

அன்பின் கனம்.

எரிமலயையொத்த

தீவிரத்துடன்

அது

கனன்றுக் கொண்டிருக்கிறது.

உனது கவனமான ஒத்திகைகளை

மறுத்து

ஒரு நாள்

அது வெடித்து சிதறும்.

அப்போது

சிறு வெளிச்சம் பரவும்.