நிகழ்ந்ததும் நிகழாததும்

கன்னட பக்தி இலக்கியத்தில் தவிர்க்கவியலாத பெயர்

அக்க மகாதேவி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்கா மகாதேவி, சைவ பக்தி மரபில் வந்தவர், சிவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு கவிதைகள் புனைந்தவர். மனிதக் காதலை நிராகரித்து தீராக்காதலோடு இறைவனைக் கண்டடைய முனைபவை மகாதேவியின் கவிதைகள்.

அது லிங்கம் என்று நான் சொல்லவில்லை

அது லிங்கத்துடனான இணைதல் என்று நான் சொல்லவில்லை

அது ஒற்றுமை என்று சொல்லவில்லை

அது இசைவு என்று சொல்லவில்லை.

அது நிகழ்ந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை.

அது நிகழவில்லை என்றும் சொல்லவில்லை.

அது நீ என்று சொல்லவில்லை.

அது நான் என்றும் சொல்லவில்லை.

சென்ன மல்லிகார்ஜுனாவின்

லிங்கத்துடன் இணைந்த பிறகு

நான் எதுவும் சொல்லவில்லை.

என்ற கவிதை அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளில் கவிந்திருக்கும் கவித்துவ அமைதிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

பக்தி இலக்கிய மரபில் வந்த பெரும்பாலான பெண் கவிஞர்கள் போலவே திருமண பந்தத்தில் அமைதி அடையாதவராக இருந்தார் அக்க மகாதேவி. ஜைன சமூகத்தைச் சேர்ந்த அவரது கணவர் கௌசிகன் பெரும் செல்வந்தராக இருந்தார். ஆனால் வசதியான வாழ்க்கையை நிராகரித்து தேசாந்திரியாகத் திரிந்து சிவன் மீதான பாடல்களை இயற்றி வாழ்க்கையைக் கழித்தார் அக்க மகாதேவி.

காதலின் மகத்தான பாதைகளைப் பாருங்கள்.

நீங்கள் ஒரு அம்பை எய்தினால்

அதை இறகு தெரியாத வண்ணம்

மண்ணில் ஊன்றுங்கள்

நீங்கள் ஒரு உடலை அணைத்தால்,

எலும்புகள் உடைந்து நொறுங்க வேண்டும்.

பற்ற வைத்தால்

அது மறைய வேண்டும்.

அப்புறம் காதல் என்றால்

எனது கடவுளின் காதல் மட்டுமே.

என்று தீவிரமாக எழுதிய அக்க மகாதேவி தான் வாழ்ந்த காலத்தில் மாற்றத்திற்கான குறியீடாகவும் இருந்தார். குறிப்பாக, அவரைப் பெண்களின் முன்னேற்றத்திற்கான குறியீடாகப் பார்க்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். தொடர்ந்து பல கூட்டங்களில் கலந்துகொண்டு பக்தி பற்றியும் கல்வி பற்றியும் தர்க்கங்களில் அவர் ஈடுபட்டார்.

அக்க மகாதேவியின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். முதல் கட்டத்தில் ஆசைகளைத் துறந்தவராகவும், இரண்டாம் கட்டத்தில் விதிகளை மறுப்பவராகவும் மூன்றாம் கட்டத்தில் சென்ன மல்லிகார்ஜுனாவை நோக்கிய பயணத்தில் ஈடுபடுபவராகவும் இருக்கிறார்.

Akka

தங்களது ஆடைகள் அவிழும் போது

ஆண்களும் பெண்களும் வெட்கப்படுகிறார்கள்.

உயிர்களின் கடவுள்

முகமில்லாமல் மூழ்கியிருக்கும் போது

நீங்கள் எப்படி வெட்கப்படலாம்?

உலகமே கடவுளின் கண்ணாக இருந்து

பார்த்துக்கொண்டிருக்கும்போது

நீங்கள் எதை மூடி மறைக்க முடியும்?

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5484455.ece

Advertisements

நாசீம் ஹிக்மட்…

துருக்கிய கவிஞர் நசீம் ஹிக்மெத் பற்றிய ஒரு கட்டுரை ஃப்ரண்ட்லைன் இதழில் வந்திருக்கிறது. (http://www.frontline.in/world-affairs/capital-and-conflict-in-turkey/article4803983.ece?homepage=true)

துருக்கியின் மிக முக்கியமான கவிஞர் அவர். 20ஆம் நூற்றண்டின் கவிஞர்களுள் முக்கியமானவர்… இடதுசாரி கவிஞர். தனது கருத்துகளுக்காக, அவற்றின் சமரசமற்ற வெளிப்பாட்டிற்காக தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்.

இவருடைய கவிதைகளில் ஒன்றை சமீபத்தில் மொழிபெயர்த்திருந்தேன். கவிதையின் ஆங்கில வடிவம்: http://www.marxists.org/subject/art/literature/nazim/icomeandstand.html

Image

தமிழ் மொழிபெயர்ப்பு:

 ஒவ்வொரு வாசலிலும் நான் நிற்கிறேன்.

ஒவ்வொரு வாசலிலும் நான் நிற்கிறேன்.

எனினும் எனது காலடித்தடத்தை கேட்பவர் யாருமில்லை.

கதவைத் தட்டுகிறேன்.

எனினும் என்னைப் பார்ப்பவர் யாருமில்லை.

எனில், நான் இறந்தவன்.

நான் இறந்தவன்.

எனக்கு வெறும் ஏழு வயதுதான்.

ஆனாலும் இறந்துவிட்டேன்,

எப்போதோ ஹிரோஷிமாவில்.

அப்போது போலவே எனக்கு

இப்போதும் ஏழு வயதுதான்.

குழந்தைகள் இறந்தபிறகு

வளர்வதில்லை.

சுழன்றடிக்கும் நெருப்பில் பொசுங்கியது எனது முடி.

என் பார்வை மங்கியது

என் பார்வை மறைந்தது.

மரணம் எனது எலும்புகளை தூசாக்கியது

பிறகு அது காற்றில் எரியப்பட்டது,

எனக்கு பழம் வேண்டாம்,

சோறும் வேண்டாம்.

இனிப்பு வேண்டாம்,

ரொட்டியும்.

எனக்கென எதுவும் வேண்டாம்.

எனில் நான் இறந்தவன்.

நான் வேண்டுவதெல்லாம்

அமைதி.

நீங்கள் இன்று போரிடுங்கள்.

நீங்கள் இன்று போரிடுங்கள்.

இவ்வுலகின் குழந்தைகள்

வாழவும், வளரவும்

சிரிக்கவும் ஆடவும்.

மழை பற்றிய பகிர்தல்கள் !!!!!!

மழை பற்றிய பகிர்தல்கள் தொகுப்பை முதன்முதலாக எப்போது வாசித்தேன் என்று நினைவில் இல்லை.. நிச்சயமாக ஒரு பத்து வருடங்கள் இருக்கலாம். அந்த காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் வாசித்த தொகுப்புகளில் அதுவும் ஒன்று. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பவும் ஒரு விஷயத்திற்கு போவது அச்சுறுத்தும் ஒரு செயல்பாடு. நாமும், அந்த விஷயமும் வெகுதூரம் கடந்திருப்போம்.

மழை பற்றிய பகிர்தல்கள் குறித்த எனது ஆரம்பகால பிம்பங்களை கலைத்து போட விரும்பாமல் பல வருடங்களாக அந்த தொகுப்பிற்குள் மீண்டும் நுழையாமல் இருந்தேன். ஆனால் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற நெடுநாள் ஆவல் காரணமாக நேற்று மீண்டும் வாசித்த போது, எனது பயங்கள் அர்த்தமற்றவையாக தோன்றின. தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் இப்போதும் மனதுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. இனி எப்போதும் இருக்கும்.

யதார்த்தத்தின் வலி தோய்ந்த கவிதைகள் பிருந்தாவினுடையது. காத்திருத்தல், பிரிவுத்துயர், மழை, சந்திப்பின் சுவாரஸ்யங்கள் என்று பெரும்பாலும் வழமையான விஷயங்களையே கவிதைகளாக்கியிருந்தாலும் யதார்த்தத்தின் தூரிகைக்கொண்டு அவற்றை புதிய வர்ணங்களில் தீட்டியிருக்கிறார். பெண்ணுணர்வை எவ்வித ஒப்பனையுமின்றி முன்வைக்கின்றன பிருந்தாவின் கவிதைகள். பறத்தலுக்கான எத்தனிப்புகளை துறக்கச் செய்து, நாம் மறந்த நடை பழக்கும் கவிதைகள். நடை என்பதே சிறகுகளற்ற ஒரு பறத்தல்தானே?

Image

மனதுக்கு நெருக்கமான சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு..

 

     I cross the blue, not as a bird

 

That, I

Encompass all the distances

That I

Reach the zenith

By holding the air

That I fly across

The heights

From my roots

That, I am

For you.

I however

Walk, my foot firmly on the ground

You are not surprised.

A flight

Is not mighty enough to tear a blue.

It merely crosses the blue.

2

Your words

Promising a visit

Remain warm in me

Minutes pass by

Like fallen leaves,

And I turn into one.

The moon is here.

In blooming sheen,

The stars too.

You never come.

Like the rain I waited for.

 

 

3

ME and them

 

While I think

That I go deep and deep,

They say

That I drown.

4

A few notes on the rain

 

The evening has arrived,

Ahead of its time, today.

The Sun has left

After exhausting all its warmth.

Unwilling to

Wake my sister from

Her deep slumber,

I sit

with few brown sheets

To write for you.

While I write

About what

This unusual summer rain

Does to me,

the winds take away

a few sheets

and put them in rain.

I envelop

My words soaked in rains

And send it across.

Beyond the blurred words,

Feel the rain, the scent of the earth.

5

I wish to

Share your solitudes

Without being conscious.

Like your breath,

In you.

6

Your nuanced looks,

Seem like

They start from the piercing

Edge of a needle.

The sun might burn

In its brightness.

The black eyes,

Like a deep sea.

Close your eyes

For sometime.

Let me

Think

beyond them.

Food city

’வீடு செல்லும் வழியில்’
என்று புன்னகையோடு
அழைப்பு விடுக்கின்றன
வண்ண ஒளி உமிழும்
அங்காடிகள்.

வீடு செல்லும் வழியில்
கொஞ்சம் பழங்களை வாங்கிக்கொள்ளலாம்.

ரத்தவாடை நீக்கப்பட்ட
இறைச்சித் துண்டுகள்
தென்னை மணம் நுரைக்கும்
மது
ஓரிரவில் வளர்ந்துவிட்டவளுக்கு
பேசச் சொல்லித்தரும்
கிளி பொம்மை
நின்று போன
கடிகாரத்துக்கு
சில
மின்கல அடுக்குகள்
என்று
வாங்கிச் செல்ல
பட்டியல் நீள்கிறது
வீடு செல்லும் பாதையை விட பெரிதாய்

எனினும்
பாதையில் தென்படும் வீடொன்றும் வீடாய் இல்லை.

பேரறிவாளன்: நின்று வெல்லும் நீதி?

பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை. எப்படி பதிவேற்றாமல் விட்டேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து எழுத எண்ணம். பார்ப்போம்.
—————————————–

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் சென்னையின் பிரதான மருத்துவமனையின் நெரிசலான வளாகத்தில் அற்புதம் அம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவமனையில் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான முகங்களில் எந்த விசேஷ கவனமும் கோரக்கூடிய முகம் அல்ல அற்புதம் அம்மாளுடையது. முதுமையும் துயரமும் அவரது தோலில் சமமாக வரிகளை நெய்திருந்தன. யாரிடமாவது துயரத்தை இறக்கிவைக்க முடியாதா என்கிற கவலை அவரிடம் எப்போதும் இருக்கும் போல. இறக்கிவைக்க இறக்கிவைக்க, சுமை குறைவது போலவும் தெரியவில்லை.

அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசாரணைக்கென்று சென்ற அறிவு இன்னும் வீடு திரும்பவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் மட்டும் வந்தது. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று அற்புதம் அம்மாளின் மகன் அறிவு ஒரு மரண தண்டனைக் கைதி.

சிறைக் கம்பிகளுடன் அறிவின் போராட்டம் தொடங்கிய அதே தருணத்தில் விடுதலையின், தண்டனைக் குறைப்பின் சிறு கீற்று காட்டும் அதிகாரமையத்தின் எல்லாக் கதவுகளோடும் அற்புதம் அம்மாளின் போராட்டம் தொடங்கியது. “ஏறி இறங்காத படி இல்லை. மோதாத கதவு இல்லை, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை” என்று ஒரு சமயம் துயரம் தோயப் பேசினாலும் அடுத்த நொடியே நம்பிக்கையை எங்கிருந்தோ தருவித்துக்கொள்கிறார் அற்புதம் அம்மாள். “எப்படியும் அறிவு எங்களுடன் வந்துவிடுவான், நாங்கள் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக இருப்போம்” என்கிறார். 63 வயது நிறைந்த அற்புதம் அம்மாளுக்கும் அவருடைய கணவருக்கும் எஞ்சிய வாழ்க்கையை நகர்த்துவது என்பதே பேரறிவாளனின் விடுதலை பற்றிய நம்பிக்கைகளால்தான் சாத்தியப்படுகிறது.

ஆனால் கடந்த ஜூனோடு பேரறிவாளனும் அவரோடு கைதுசெய்யப்பட்ட ஏழுபேரும் சிறையில் 20 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறார்கள் என்பது அவர்களின் தீவிரமான நம்பிக்கையைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் செய்தி. பேரறிவாளன் உள்படச் சிறையில் இருக்கும் நான்கு மரண தண்டனைக் கைதிகளுக்கு 20 வருடங்களுமே மரணத்தை நோக்கிய பயணம். பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம், கொலையாளிகளுக்கு அவர் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பதே. மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களில் இன்னும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமற்ற சமூகத்தில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததற்காக மரண தண்டனையை எதிர்கொள்வதென்பது உச்சபட்ச கொடுமை. அதனால்தான் தனது போராட்டத்தை உண்மைக்கான போராட்டம் என்கிறார் பேரறிவாளன். “மரணத்தின் வாயிலில் நிற்கும் மனிதன் நான், உண்மை தோற்றுவிடக் கூடாது என்று விரும்புகிறேன்” என்று கோருகிறார். தனது நிலையை விளக்கி தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்று பேரறிவாளன் எழுதியிருக்கும் ஒரு சிறு பிரசுரம் எந்தவொரு மன சாட்சியையும் உலுக்கக்கூடியது.

“இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடுதலை கிட்டவில்லையானால், இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை. வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ தற்போதே உறுதிசெய்யப்பட்டாக வேண்டும். அல்லது இன, மொழிப்பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என்று வரலாறு குறிக்கட்டும்” என்கிறார். ஆனால் பேரறிவாளனின் இந்தக் கோரிக்கைகளுக்கு, அற்புதம் அம்மாளின் உறுதியான போராட்டத்துக்கு இந்தச் சமூகம் இரண்டு தசாப்தங்கள் கழித்தும் எந்த எதிர்வினையும் பெரிதாக ஆற்றிவிடவில்லை.

மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் ஒரு சிலரின் கோரிக்கைகள், 1999இல் பேரறிவாளனின் சொந்த ஊரில் நடந்த கடையடைப்பு, இது தாண்டி எதுவுமே நடக்கவில்லை. பேரறிவாளனுக்காகப் பேச வேண்டிய கடமை அவரது சொந்த ஊரான சொலையார் பேட்டை மக்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பது போலவொரு பாவனையில் வாழ்ந்துவருகிறோம்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தச் சமூகம் இப்படி மரத்துப்போனதற்கு என்ன காரணம்?

பொருட்படுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி நாம் எப்போது மௌனம் காக்கத் தொடங்குகிறோமோ அன்று நமது வாழ்வு முடியத் தொடங்குகிறது என்று சொல்லியிருக்கிறார் மார்ட்டின் லூதர் கிங். பேரறிவாளனுக்குச் சமூகம் ஆற்றிக் கொண்டிருக்கும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது நமது சமூகம் அதன் மனசாட்சியின் துடிப்பை நிறுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.

19 வயதில் சிறை சென்று கடந்த 20 வருடங்களாகத் தனது இளமைக் காலத்தைச் சிறையின் அடர்ந்த இருள் பக்கங்களுக்குள் தொலைத்து விட்டு இப்போது இளமை முடிந்தும் மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு தனக்காக அல்ல, நீதிக்காகவும் உண்மைக்காகவும் சிறு வெளிச்சம் தேடிக்கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கும் சிறைக்குள் நடக்கும் அவரது போராட்டத்துக்குச் சிறைக்கு வெளியே வெவ்வேறு வடிவங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் அற்புதம் அம்மாளுக்கும் இந்த முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் அது அவர்களுடைய தோல்வியாக மட்டுமே இருக்காது. அது மானுடத்தின் தோல்வியாக இருக்கும்.

நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வோர் அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்கிறார் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண ஐயர்.

உலகிலுள்ள நாடுகளில் 135 நாடுகளில் சட்டரீதியாகவோ செயல்ரீதியாகவோ மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களிலும் செயல்வடிவங்களிலும் வைத்திருக்கும் 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவும் அதில் இருக்கிறது என்பதுதான் வேடிக்கை. அமெரிக்காவிலுள்ள ஒருசில மாநிலங்கள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளில் 90 சதவிகிதம் பேர் ஏழைகள். அவர்களால் அவர்களுக்கென்று வழக்கறிஞர் வைத்துக்கொள்ளக்கூட முடியாத ஏழைகள். அதேபோல் அமெரிக்காவில் மரண தண்டனை இல்லாத மாநிலங்களைவிட மரண தண்டனை அமலில் உள்ள மாநிலங்களில் கொலைக் குற்றங்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின்றன.

மரண தண்டனைகளுக்கும் கருணை மனுக்களுக்கும் இடையிலுள்ள அரசியல் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மரண தண்டனைக்கெதிரான கருத்தரங்கு ஒன்றில் பேச வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான நந்திதா ஹக்சர் சென்னை வந்திருந்தார். மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அப்சல் குருவுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நந்திதா ஹக்சர். நாடாளுமன்றத் தாக்குதலில் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட கிலானியின் வழக்கறிஞராகவும் இருந்தவர்.

முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் பதவியிலிருந்து விலக ஓரிரு நாட்களே இருந்த சூழலில் நந்திதா, கலாமைச் சந்தித்து அப்சல் குருவின் கருணை மனு பற்றிக் கேட்டிருக்கிறார். மனு இன்னும் தனது கைகளுக்கு வரவில்லையென்று பதில் சொல்லியிருக்கிறார் கலாம். கருணை மனு கலாமின் கைகளுக்குச் சென்று விட்டால் அவர் அதை அங்கீகரிக்கக்கூடும் என்கிற அச்சம் காரணமாகக் கருணை மனு அவருக்கு அனுப்பப்படவில்லை, இதற்கு அரசியலே காரணம் என்கிறார் நந்திதா ஹக்சர்.

பேரறிவாளனுக்கு ஒரு பேட்டரி என்றால் கிலானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்குக் காரணம் ஒரு தொலைபேசி உரையாடல். காஷ்மீரி மொழியில் அவர் தன் சகோதரருடன் பேசியதை வைத்து அவருக்கு நாடாளுமன்றத் தாக்குதல்களில் பங்கு இருக்குமென்று முடிவு செய்து பொடா சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. காஷ்மீரியிலிருந்து ஆங்கிலத்தில் அந்தத் தொலைபேசி உரையாடலை மொழிபெயர்த்ததில் பல பிழைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் பழக்கம் இருந்ததைத் தவிர கிலானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேறு காரணங்கள் இல்லை. 2002 டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிலானி, அவர்மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் அக்டோபர் 2003இல் விடுதலை செய்யப்படுகிறார்.

கிலானிக்கு ஆதரவாகப் பல மனித உரிமை அமைப்புகளும் அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்த காரணத்தால் ஆசிரியர் அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் போராடியது குறிப்பிடத்தக்கது. தனக்கு ஆதரவாகப் போராடியவர்களுக்கு எழுதிய மடல் ஒன்றில் கிலானி இப்படிக் குறிப்பிடுகிறார்: “நீங்கள் ஒரு தனிமனிதனுக்காகப் போராடவில்லை, ஜனநாயகம், நீதி போன்ற விழுமியங்களைக் காப்பாற்றுவதற்கும் அவை நிலைபெறுவதற்கும் நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.”

பேரறிவாளனுக்கும் இது பொருந்தும்.
காலச்சுவடு: இதழ் 140

361 டிகிரி சிற்றிதழில் வெளியான எனது கவிதைகள்..

நான்,
ஒற்றை முலை அரசி.

பெருமுலைகள் விதைகளாய்
விழுந்து
சூல் கொள்ளும்
என் நிலம்.

நீராலமைந்த என் கொந்தளத்தில்
விளையாடும்
முலை தொலைத்த சிறுமீன்கள்.

இல்லாத என் முலைகளுக்கு உண்டு,
ஓராயிரம் கதைகள் –

நெகிழ்ந்தவழிந்த ஒரு
கணத்தில்
பூமி பிளந்ததென்றும்
பின்னர்
பொன் பூவாய்
பூத்ததென்றும்.

சூல் கொண்ட என்
நிலத்தில்
விழுந்த முலைகள் எல்லாம்
பொன்பூவாய்
செழித்துயரும்.

எனினும்,
வருத்திக் கொண்டிருக்கிறது,
என்னை முலைகளற்றவளாக்கும்
இந்த
மூன்றாவது காதல்.
———
தண்டனைக்காலம்

சாட்சிகளோ

தேர்வுகளோ அற்று

விதிக்கப்பட்டது.

பிறகு,

குற்றப்பத்திரிக்கை எழுதினார்கள்.

இறுதியில்

புகார் வாசித்தார்கள்.

வரலாறு,

வெறும் புனைவு.

எனது தண்டனை,

ஊர் எரிந்த,

கொற்றவன் மாய்ந்த

வரலாறின்

பதிவிடப்படாத

கழிவு.

வரலாறுகள் மீளும் போது

அதன் மேன்மைகளை பேசிக்கொண்டிருந்தவர்கள்.

குருடர்களாகிறார்கள்.

அல்லது

ஊமைகளாக.

நானோ

கிள்ளியெறியப்பட்ட முலையின்

வீணடிக்கப்பட்ட ஒரு துளி தீயாகிறேன்.

இப்போதும்

சில கொலைகளை

செய்துக்கொண்டிருக்கிறேன்.

—————–

இப்போது பேசுவோம்.

முன்னொரு காலத்தில்
பேச முடியாமலும் பேச மறுத்தும்
விடுபட்டு போன வார்த்தைகள்
அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றன.
வர்ணங்கள் பூசி,
வாசனை திரவியங்கள் தெளித்து
அழகு குலையாமல் அடுக்கி
அந்த வார்த்தைகளை
அரங்கில் வைப்போம்.
முடிந்தால்
ஒரு விற்பனை பிரதிநிதியை நிறுத்தி வைப்போம்.
புதைக்கப்பட்டவர்களின் வரலாறுகளை எடுத்து
சாட்சிக்கு வைப்போம்.
முன்பு ஆதரவாக பேசியவர்களுக்கு எதிராகவும்
எதிராக பேசியவர்களுக்கு ஆதரவாகவும்
சொற்களை அடுக்கி வைப்போம்.
விற்பனை தந்திரங்களில் அதுவும் ஒன்று.
நிறமற்ற வார்த்தையின் மீதிருப்பது
கண்ணீரின் நிறமென்று
விளம்பரம் செய்வோம்.
குருதியின் நிறம் கொண்ட சொற்கள்
அரிதென்று சொல்லி அதிக விலை வைப்போம்.
யாராவது வருவார்கள்.
நாளை நமது வார்த்தைகள்
நம்முடையதாக இல்லாமல் போகலாம்.