சாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும்

ஜனவரி 3ந்தேதி உயிரெழுத்து பதிப்பகம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு நானும் முரளியும் சென்றிருந்தோம். நண்பர்களைப் பார்ப்பதற்காக நாங்கள் இந்த விழாக்களுக்கு போவதுண்டு. குறிப்பிட்ட அந்த விழாவில் பல ஹைலைட்டுகள்.

எனக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பட்டன. ஒன்று, விழாவுக்கு தலைமை தாங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் அப்துல் ரகுமானைப் புகழ்ந்து சொன்ன சில வார்த்தைகள். பல வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு எழுத்தாளர் கோட்டாவில் எம்.பி.பிஎஸ் சீட் பெறுவதற்கு அப்துல் ரகுமான் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். தனது மகள் 600க்கு 596 மார்க்குகள் எடுத்ததாக சொன்னார் அவர். “அதற்கு மேல் அவளால் எடுத்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்து வளர்ந்த சாதியின் சுமை காரணமாக அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” என்று சொன்னார். பிறகு பேசிய யாரோ ஒருவர் அவர் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

2006ல் International Dalit Solidarity Network என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வகுப்பறைகளில் கடைசி பெஞ்சுகளில் உட்கார கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களுடன் சேர்ந்து மற்ற சாதியினர் உணவருந்துவதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்திய அரசின் ஒரு அறிக்கைப்படி கிட்டத்தட்ட 73 சதவிகிதம் தலித் மாணவர்கள் பள்ளியிறுதி முடிவதற்குள் பள்ளியிலிருந்து விலகி படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், பள்ளிக்கூடங்களில் அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே பல பள்ளிகளில் கழிவறைகளை கழுவவும் வகுப்பறைகளை கூட்டவும் தலித் குழந்தைகள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் எதுவும் நாஞ்சில் நாடனின் மகளுக்கு நிகழ்ந்திருக்காது. அவருடைய பள்ளிக்கூட படிப்பு மிகவும் உயர்தரமான ஒன்றாக இருந்திருக்கும். தலித் மாணவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

நாஞ்சில் நாடன் சாதியின் சுமை என்று எதைச் சொல்கிறார்?

அப்துல் ரகுமானை பாராட்டும் அவசரத்தில் அவரை ‘ஆண்மையுள்ள கவிஞர்’ என்றும் குறிப்பிட்டார். ஆண்மை என்பதற்கு சமூகம் வைத்திருக்கும் போலியான வரைமுறைகளுக்கு நாஞ்சில் நாடன் என்னும் மகா எழுத்தாளனும் தப்பவில்லை.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பிறகு பேச வந்த அப்துல் ரகுமான் ‘ஆண்மையுள்ள’ ஒரு கவிஞராகவே நடந்துகொண்டார். அவரது பேச்சில் ஆணாதிக்கம் மிளிர்ந்தது. சக்தி ஜோதியின் கவிதை தொகுப்பை வெளியிட்டு பேசியவர், ‘செக்ஸ் கவிதைகள்’ எழுதுவதாக இன்றைய பெண் கவிஞர்களை கடுமையாக சாடினார். “நீங்களெல்லாம் ஏன் எழுதறீங்கனு இருக்கு. பின் பக்கம் எழுத போக வேண்டியதுதான். ஏன் இலக்கியம் பக்கம் வர்ற?” என்று மிகக் தரக்குறைவாக பேசினார். உச்சபட்சமாக, சக்தி ஜோதியின் கவிதை ஒன்றை வாசித்துக்காட்டி, ‘”இதுவும் செக்ஸ் கவிததான். ஆனா எப்படி இருக்கு பாரு. நாகரீகமா பண்பாடு மீறாம இருக்கு, நீயும் எழுதறியே?” என்று ஏக வசனம்.

பெண் கவிஞர்கள் எழுதும் கவிதைகள் பாலியலை அரசியலாக்குகிறது. பாலியல் அடிப்படையில் பெண்ணுடல் மீது ஆதிக்கம் செலுத்த விழையும் ஆணாதிக்கப்போக்கை கேள்விக்குட்படுத்துகிறது. இது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க மனதின் வெளிப்பாடே அப்துல் ரகுமான் போன்றவர்களின் விமர்சனங்கள், ‘செக்ஸ் கவிதைகள்’ என்று கொச்சைப்படுத்துதல்கள்.

விழாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், நாஞ்சில் நாடன் மீதிருந்த மரியாதை எஞ்சியிருக்கும்.

Advertisements

23 comments

 1. நந்தா · ஜனவரி 7, 2010

  முழுக்க உடன் படுகிறேன். Well written Article.

 2. pukalini · ஜனவரி 8, 2010

  ??கோட்டாவில் எம்.பி.பிஎஸ் சீட் பெறுவதற்கு அப்துல் ரகுமான் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். தனது மகள் 600க்கு 596 மார்க்குகள் எடுத்ததாக சொன்னார் அவர். “அதற்கு மேல் அவளால் எடுத்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்து வளர்ந்த சாதியின் சுமை காரணமாக அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை??

  இது என்னது?

  • kavithamuralidharan · ஜனவரி 9, 2010

   புரியவில்லையா?!! அவ்வளவு மார்க்குகள் எடுத்தும் தனது மகளுக்கு சீட் கிடைக்கவில்லை, அதற்கு காரணம் தனது சாதி என்பதுதான் நாஞ்சில் நாடன் வாதம். அப்துல் ரகுமான் அந்த சீட்டை எழுத்தாளர் கோட்டாவில் நாஞ்சில் நாடனுக்கு வாங்கித்தந்தார்.

   • kavithamuralidharan · ஜனவரி 9, 2010

    அதாவது சாதியால் போயிருக்க வேண்டிய தனது மகளுக்கான சீட் எழுத்தாளர் என்பதாலும் அப்போது அந்து குழுவுக்கு அப்துல் ரகுமான் தலைவர் என்பதாலும் நாஞ்சிலின் மகளுக்கு கிடைத்தது.

 3. rudhran · ஜனவரி 8, 2010

  ஆதங்கம் புரிகிறது; அதற்குமேல் ஒன்றும் செய்யவும் தெரியவில்லை. இவர்களை இந்த பீடத்தில் ஏற்றிவிட்டபின், அவர்களின் சத்தம் இயல்பாகவே தான் சுய அநாகரிக்கத்துடன் வெளிப்படுவதும் ஆச்சரியமானது அல்ல. பதிவுக்கு நன்றி.

 4. kuppan_yahoo · ஜனவரி 8, 2010

  is it so, abdul rahman generally talks decently.

 5. கையேடு · ஜனவரி 10, 2010

  //விழாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், நாஞ்சில் நாடன் மீதிருந்த மரியாதை எஞ்சியிருக்கும். //

  உண்மைதாங்க.. இணையத்தில் வாசிக்கத் துவங்கிய பிந்தான் பல திரைகள் விலகுகின்றன. எழுத்தாளர்களின் எழுத்தின் மீதிருந்த மதிப்பு கூட குறைகிறது..

  ஆனாலும், அப்துல் ரகுமான் அவர்கள் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல.. இல்லையா.

 6. pukalini · ஜனவரி 11, 2010

  நடக்கட்டும்.

 7. uumm · ஜனவரி 11, 2010

  welcome your thoughts..kavi..

 8. வித்யாசாகர் · ஜனவரி 15, 2010

  சமூக நாற்றத்தால் புழுங்கி புழுங்கி உறக்கம் தொலைத்தவனின் மனதிற்குள் துள்ளும் சாடல்கள் வெளியே தெரியாத வரை; யார் யாரோ பெரிய ஆள் தான்.

  உண்மை நிறைய நேரம் நிறைய பொய்யை மறைத்துக் கொண்டுவிடுகிறது. அந்த மறைப்பில் பித்தளைகள் தங்கமாகி விடுகின்றனவோ என விடும் பெரு மூச்சைதவிர்த்து, எழுத்தால் எழுத்துக்கான மதிப்பை திருப்பித் திற முயன்ற பதிவு! மிக்க நன்றி!

 9. underdog · ஜனவரி 21, 2010

  தலித்களுக்கு கல்வி தர நாஞ்சில் நாடனா தடை. 600க்கு 596 எடுத்தவர் ஒரு சாதியில் பிறந்திருந்தால் இடம் கிடைக்காது ஆனால் அதை விட மதிப்பெண் குறைவாக எடுத்தவர் வேறொரு சாதியில் பிறந்ததனால் இடம் கிடைத்து மருத்துவப் படிப்பு படிப்பார் என்பதில் என்ன நீதி இருக்கிறது.இன்றைக்கு ஒபிசி பட்டியலில் உள்ள சாதிகளில் இருப்பவர்கள் எல்லோருமே கல்வி-சமூகரீதியாக பின் தங்கியுள்ளார்கள்.1970களில் சட்டநாதன் கமிஷன் சுட்டிக்காட்டியது, 1980களில் அம்பாசங்கர் கமிஷன் சுட்டிக்காட்டியது, 2008ல் TISS செய்த ஆய்வு இதையெல்லாம் உங்களைப் போன்றவர்கள் அறிவீர்களா. ஒருவேளை அறிந்திருந்தாலும் அதை சொல்ல மாட்டீர்கள் போலும். நாஞ்சில் நாடனுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும் தமிழ் நாட்டில் 50% இட ஒதுக்கீடு பிற்பட்டோர் என்ற பிரிவில் உள்ளவர்களுக்கு தரப்படுகிறது என்று. அது 32% ஆக இருந்திருந்தால் அவர் மகளுக்கு இடம் கிடைத்திருக்கலாம். எந்த கமிஷனும் பரிந்துரைக்காத போது 32% த்திலிருந்து அதை 50% ஆக உயர்த்தியது எம்ஜிஆர் அரசு.உங்களுக்கெல்லாம் முற்பட்ட ஜாதி என்று இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களின் நியாயமான உணர்வுகளை கொச்சைப்படுத்த தலித்களின் நிலை என்ற போலி அனுதாபம் காட்டுவது கை வந்த கலை.

  ‘இதில் எதுவும் நாஞ்சில் நாடனின் மகளுக்கு நிகழ்ந்திருக்காது. அவருடைய பள்ளிக்கூட படிப்பு மிகவும் உயர்தரமான ஒன்றாக இருந்திருக்கும். தலித் மாணவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

  நாஞ்சில் நாடன் சாதியின் சுமை என்று எதைச் சொல்கிறார்?’
  இவை எதுவும் ஒபிசி பிரிவில் உள்ள சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிகழ்ந்திருக்காது. அவர் சாதியின் சுமை என்று சொன்னது இட ஒதுக்கீடு என்கிற பெயரில் நடக்கும் அநீதியின் சுமையை.

  • kavithamuralidharan · ஜனவரி 21, 2010

   திரு அண்டர் டாக், நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் மிக அப்பட்டமாக சாதிய உணர்வோடு வெளிப்பட்டிருக்கிறீர்கள். தலித்துகளுக்கு உரிய கல்வி கிடைக்காமல் போனதில் நாஞ்சில் நாடன் முன்னோர்களுக்கும், எனது முன்னோர்களுக்கும் ஒருவேளை உங்களது முன்னோர்களுக்கும் பங்கு இருந்திருக்கலாம். 2000 வருடங்களாக கல்வி மறுக்கப்பட்டு இப்போது கல்வி பயில வரும் போது எடுத்தவுடன் அவர்கள் எட்டுக்கால் பாய்ச்சலில் முன்னேற வேண்டும், அப்படியவர்களால் முடியாது என்றால் அவருக்கு குறைந்த மதிப்பெண் கிடைத்திருக்கிறது, அதனால் அவருக்கு சீட் ஒதுக்குவது நீதி இல்லை. என்ன உங்களது நியாயம்? இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிற ஜாதியினரது உணர்வுகள் எந்த அடிப்படையில் நியாயமாக இருக்கும்? இவ்வளவு காலம் அடக்கி ஆண்டு அனுபவிப்பது போதாதா? சொல்லப்போனால், அதன் பலன்களை இப்போதும் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பல தாழ்த்தப்பட்ட வகுப்பினரால் இன்னும் முன்னேற முடியவில்லை. தலித்துகள் பற்றிய அனுதாபம், போலியா இல்லையா என்பது பற்றிய சான்றிதழை யாரும் உங்களிடமிருந்து கோரவில்லை.
   உங்களது கருத்துக்களில் வெளிப்படும் ஆதிக்க மனோபாவம் எனக்கு அதிர்ச்சியாகவும் அருவருப்பாகவும் இருந்தாலும் அதை இங்கு பிரசுரித்ததற்குக் காரணம், எந்த கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான்.

   • Govindasamy Sekar · மே 28, 2013

    The so called forward casts have enjoyed 2000 years of reservation without any govt. order. Now only majority people are getting their due in the name of reservation by democratically elected govt. But they are struggling to get and retain the same.

 10. கட்டியக்காரன் · ஜனவரி 21, 2010

  அண்டர்டாக் சார்,
  600க்கு 596 எடுத்த ஒருவருக்கு சீட் கிடைக்கவில்லை என்றவுடன், முன்னேறிய ஜாதியில் உள்ள யாருக்கும் இடம் கிடைக்கவில்லை என்று புரிந்துகொள்வது அபத்தத்திலும் அபத்தம். 596லிருந்து 600வரை மதிப்பெண் பெற்ற முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் இதற்கு அர்த்தம். முன்னேறிய வகுப்பில் பிறந்த அவர்கள் (597லிருந்து 600வரை மதிப்பெண் பெற்றவர்கள்) இடஒடுதுக்கீடு போக மீதமிருக்கும் 50 சதவீத இடங்களைப் பிடித்துக்கொண்டதால்தான் நாஞ்சில்நாடன் மகளுக்கு இடம் கிடைக்கவில்லை.
  நீங்கள் சொல்வது போல இடஒதுக்கீடு 32 சதவீதமாக இருந்திருந்தால் அவருக்கு இடம் கிடைத்திருக்கலாம். ஆனால், தொண்டைநாடான் மகளுக்குக் கிடைத்திருக்காது. அப்போது அண்டர் டாக் சொல்கிறார் என்று இடஒதுக்கீட்டை 16 சதவீதமாக மாற்றிவிடுவதா? அப்போதும் இடம் கிடைக்காத முன்னேறிய வகுப்பினர் சிலர் இருப்பார்கள். அதற்காக 2 சதவீதமாக இடஒதுக்கீட்டைக் குறைப்பதா? இட ஒதுக்கீடு என்பது மாநிலத்தின் ஒட்டுமொத்தச் சூழலை கவனத்தில் வைத்து உருவாக்கப்படுகிறதே தவிர, 596 மதிப்பெண் பெற்ற நாஞ்சில்நாடன் மகளுக்கு இடம் கிடைக்கிறதா இல்லையா என்பதை வைத்து அல்ல. நாஞ்சில் நாடனால் அவர் மகளுக்கு நல்ல கல்வியைத் தர முடியும். மண் சுமக்கும் சிலரால் மக்களை பள்ளிக்கூடத்திற்கே அனுப்ப முடியாது. சிலரால் செருப்புப் போட்டு வீதிகளில் நடக்க முடியாது. இதில் எது ஜாதியினால் ஏற்பட்ட சுமை? 596 மதிப்பெண் எடுக்குமளவுக்கு மகளை நல்ல முறையில் வளர்த்த நாஞ்சில்நாடன், சிபாரிசின் மூலம் இடம் பிடிக்குமளவுக்கு செல்வாக்கு உள்ள நாஞ்சில்நாடன் தன் மீது ஜாதியின் சுமை இருப்பதாக பொது மேடையில் முழங்குகிறார். ஆனால், பள்ளிக்கூடத்திற்கே அனுப்ப முடியாமல் இருப்பதும், செருப்பு போட்டு நடக்க முடியாததும் எனக்கு ஜாதியின் சுமையாகத் தெரிகிறது. நாஞ்சில் நாடனா செருப்பு போட்டு நடக்கக்கூடாது என்று சொன்னார் என்று கேள்வியெழுப்புவீர்களானால், அதற்குப் பிறகு உங்களுக்குப் பதிலளிப்பது வீண்.

 11. சவுக்கு · ஜனவரி 31, 2010

  அன்பார்ந்த தோழர்,

  அப்துல் ரகுமானாவது கருணாநிதியின் அடிவருடியாக தன்னை காண்பித்துக் கொள்வதில் சுகம் கண்டு, வக்ஃபு வாரிய தலைவர் பதவியை பெறுவதில் வெற்றி கண்டவர். தங்களை எல்லோரை விடவும் முற்போக்காளர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ளும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரின் வினவு தளத்தில், லீனா மணிமேகலையின் கவிதையை வெளியிட்டு தரம் குறைந்த விமர்சனத்தையும் வைத்திருக்கிறார்கள். லீனா மணிமேகலையின் கவிதைகளில் நான் ஆபாசத்தை காணவில்லை. விரக்தியையும், கையறு நிலையையும், கோபத்தையுமே கண்டேன்.

  கருணாநிதியிடம் வாலைக் குழைத்து பிழைப்பு நடத்தும் அப்துல் ரகுமானுக்கு, பெண் கவிஞர்களை பற்றிப் பேச எவ்வித அருகதையும் இல்லை. இசுலாமிய இனப் பழக்கமான பெண்களுக்கு பர்க்கா அணியும் வழக்கத்தை நியாயப் படுத்துபவர்தானே அப்துல் ரகுமான்.

 12. Ram · பிப்ரவரி 25, 2010

  தற்காலத்தில், நமக்கு என்ன தெரியும் என்பதைவிட யாரைத் தெரியும் என்பதுதான் மிக முக்கியம். இட ஒதுக்கீடு எல்லாம் அதற்கப்புற‌ந்தான். இதுதான் நிதர்சனம். நாஞ்சில் நாடன்கள் இதற்கு விதிவிலக்கல்ல.

  நறுக்குத்தெறித்தாற்போன்ற எழுத்துக்கள்; அதற்கேற்ற வீரியமுள்ள மறுமொழிகள்.

  மிக்க நன்றி.

 13. ஜமாலன் · மார்ச் 14, 2010

  பதிவும் அதற்கான பின்னோட்டங்களும் அருமை. நாஞ்சில்நாடன் சாதிச்சுமை என்று கூறுவதில் அர்த்தமே இல்லை. கட்டியக்காரன் அதை அருமையாக விளக்கியுள்ளார். அப்துல் ரகுமான் கருத்துக்களை அத்துனை சீரியஸாக எடுக்க வேண்டாம். அவர் பற்றி யாரும் சொல்லாமலே தெரியும். பதிவில் உங்களின் ஆவேசம் பாராட்டத்தக்கது. இவர்களுக்கு சாதி, பெண்ணடிமை என்கிற இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழுந்தைபோல. உமா சக்ரவர்த்தி சொல்வது போல சாதியும் பாலினமும் இயைந்தேதான் உள்ளன.

  //பெண் கவிஞர்கள் எழுதும் கவிதைகள் பாலியலை அரசியலாக்குகிறது. பாலியல் அடிப்படையில் பெண்ணுடல் மீது ஆதிக்கம் செலுத்த விழையும் ஆணாதிக்கப்போக்கை கேள்விக்குட்படுத்துகிறது. இது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க மனதின் வெளிப்பாடே அப்துல் ரகுமான் போன்றவர்களின் விமர்சனங்கள், ‘செக்ஸ் கவிதைகள்’ என்று கொச்சைப்படுத்துதல்கள்.//

  இந்த பார்வைதான் முக்கியம். பாலியலை அரசியலாக்குவது மட்டுமல்ல கற்பனார்த்தம் வழியும் தமிழக்கவிதைக்கு பெண் கவிஞர்கள் அடிக்கும் சாவுமணியும் ஒரு காரணம். அடிப்படை ஆட்டம்கானும்போது இத்தகைய பிதற்றல்களும் ஓலங்களும் வரத்தான் செய்யும்.

 14. pasumpon · மே 26, 2010

  dear author
  it waswell written article , if you see the caste and economic situation , it is almost equal , lower caste people are in lower economic situation .if you see the development in southern states is more than northern because of the reservation policies of southern states especially tamil nadu. it will make the total upliftment of the society.
  but i personally feel those who enjoy these reservation before should give opportunity to people who didnt enjoy the reservation .more we have accept the fact the people in foward caste are studying and working hard to get good marks , but they should give some preference in joining top colleges.

  • kathir · மே 27, 2013

   pasumpon …
   its a dibatable subject and its very easy to known by everyone that why reservation given to poor caste :-
   1. it will difficult to identify the person whos born as poor as Individual though govt given reservation by caste which is 95 % correct.
   2. people who’s missing seat in small margin –> they will hate poor caste and reservation
   it’s obviuos
   pls pls – read history and current status of poor caste and their life style then come with me for dabate …..

   Kathi

 15. மகிழ்நன் · மே 27, 2013

  //600க்கு 596 எடுத்தவர் ஒரு சாதியில் பிறந்திருந்தால் இடம் கிடைக்காது ஆனால் அதை விட மதிப்பெண் குறைவாக எடுத்தவர் வேறொரு சாதியில் பிறந்ததனால் இடம் கிடைத்து மருத்துவப் படிப்பு படிப்பார் என்பதில் என்ன நீதி இருக்கிறது.//

  ஆதிக்க சாதி ஆணின் விந்தை உள்வாங்கி, ஆதிக்கசாதி பெண்ணின் கருப்பையில் உருவாகி வளர்ந்ததானாலேயே தன்னை உயர்சாதி என்றும், சக மனிதனைவிட மேலானவர் என்ற நினைப்பும் இருக்கும் வரை இது இருக்கத்தான் செய்யும். பன்னெடுங்காலமாக செய்து வந்து கொடுமைகளுக்கு கழுவாய் தேட முடியாமல்..சீட் கிடைக்கலை, மயிர் கிடைக்கலைன்னா…..

  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்கள் பாட்டன், முப்பாட்டனின் சாதித்திமிர் வீடு கூடத்தான் எங்களுக்கு தரலை…நியாயமா உங்ககிட்ட இருக்கிற வீட்டை புடுங்கிட்டு, ஒரு நூறு வருசம் எங்களை மாதிரி கஷ்டப்பட்டுட்டு வந்து படிங்கடான்னு சொல்லியிருந்தா….இந்த உயர்சாதி ஆணவ சுமை வந்திருக்காது…

  சாதி சுமையாயிருக்குன்னா…. என்ன மசிருக்கு அதை தூக்கி சுமக்கிறீங்க…

  • singapooran · மே 30, 2013

   மகிழ்நன்

   நாம் சாதியை சுமக்க வேண்டியதில்லை, அரசியல் காரணங்களால் அது நமக்கு சுமையாக அமைந்துவிடுகிறது. எனக்கு சாதில நம்பிக்கை இல்லேன்னு சொன்னா உடனே சீட்டோ வேலையோ கிடைக்குமா என்ன? இறக்கும் வரை சாதி முத்திரை கூடவே தானே இருக்கபோவுது?

   600க்கு 596 வாங்கினாலும் மேல்சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் ஒரு பொண்ணுக்கு சீட் இல்லை. இந்த நிலை ஏன்? நாஞ்சில் நாடன் போல் செல்வாக்கில்லாத எத்தனையோ அப்பாக்களும் 596 வாங்கின அவர்கள் பிள்ளைகள் வாழும் நாடு தான் இன்றைய தமிழகம். What happens to them? Where do they go? What about their future and potential? Isn’t society losing such talent?

  • அனாமதேய · மே 30, 2013

   இட ஒதுக்கீடுஇக்கு எதிராக பேசுவது இப்போது பேஷன் ஆஹி விட்டது

 16. Vijay Gopalswami · மே 30, 2013

  600க்கு 596, எடுத்தவர் என்றால் மாநிலத்தில் முதல் இடம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் பத்தாவது இடமாகக் கூட இருக்கக் கூடும். அந்த பத்தாவது இடம் என்பது அவர்களுடைய மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணாகக் கூட இருக்கக் கூடும். ஒரு விளம்பரத்திற்காகவாவது முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டு படிக்க வைக்க தனியார் புற்றீசல் கல்லூரிகள் கண்டிப்பாக படையெடுப்பார்கள். ஆனால் தலித் மக்களுக்குக் கொஞ்சம் போல் கிள்ளிக் கொடுக்கப்படுகிற இந்த ஒதுக்கீடு தான் பலருடைய கண்களை உறுத்துகிறது. பழைய எழுத்தாளர் நாஞ்சில்நாடன் முதல், நேற்று முளைத்த பாடகி வரை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s