‘போகிற போக்கில்…’ பகுப்புக்கான தொகுப்பு

முதல் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது நிகழ்வில் (ஜனவரி 30 அன்று நாகர்கோவிலில் நடந்தது) நான் வாசித்த சிறுகுறிப்பு. தமிழின் முக்கிய கவிஞர்கள் சுகுமாரன், க.மோகனரங்கனுடன் நடுவர் குழுவில் நானும் இருந்தேன் (மன்னன் படத்தில் கவுண்டமணி சொல்லும் தொழிலதிபர்கள் டயலாகை நினைவுப்படுத்திக் கொள்ளாதீர்கள்). இந்த உரையில் இல்லாத, ஆனால் நிகழ்வில் நான் சொன்ன ஒரு விஷயம், நடுவர் குழுவில் இருப்பதற்கான எனது தகுதி நான் ஒரு நல்ல கவிதை வாசகி என்பதுதான்.  பேசி முடித்தவுடன், தாணு பிச்சையாவின் மனைவி வந்து எனது பேச்சு பிடித்திருந்தது என்று சொன்னது நெகிழ்வாக இருந்தது. 

ஆபரண அழகாக, கௌரவமாக, பகட்டாக, ஆடம்பரமாக, சொத்தாக பல சமயங்களில் ஒரு பெண்ணின் வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக இதுவரை தமிழ்சூழலில் பிரதிநிதித்துவம் பெற்று வந்த தங்கத்தை கவிதைகளாக்கிக் காட்டியிருக்கும் ஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார் தாணு பிச்சையா. தங்கத்தின் மேற்பூச்சு மினுமினுப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை, இவரது கவிதைகள். அந்த மினுமினுப்புக்கு பின்னாலிருக்கும் உழைப்பின் வலிகளை பதிவு செய்கிறது தாணு பிச்சையாவின் கவிமனம்.தாணு பிச்சையா காட்டும் கவியுலகம் தமிழ் படைப்புச் சூழலுக்கு மிக புதிது. அவரது கவிதைகளில் பொன் நம் எல்லோருக்கும் ஜொலிப்பது போல ஜொலிக்கவில்லை.மழைத்துளி போலுள்ள கல்வைத்த தொங்கட்டானை செய்ய மஞ்சாடி கூட தேறாத போது, பொன் வறுமையாக கசங்குகிறது.அக்காக்கள் அம்மாக்களானதும் வழமை போல காணாமல் போகும் போது, பொன் நகைகள் பெருங்கனவுகளாகின்றன.அவள் முகத்திற்கு பொருத்தமாயிருக்குமென அன்று தேர்வு செய்த நடுவில் நீலம் பதித்த மூன்று வரிசைக் கல்கம்மலை கேட்டு பிராயக்காரப் பெண் வரும் போது, பொன் கழிவிரக்கமாகிறது. மூக்குத்திகளுக்கு அழகு சேர்க்கும் மூக்குத்திக்காரிகள் பற்றி பேசும் போது, பொன் காதலாகிறது.சில பவுன்களுக்காய் நிராகரிக்கப்பட்ட பெண்ணை கணவனுடன் பார்க்கும் போது, பொன் பொறாமையாகிறது.தாணு பிச்சையாவின் கவிதையில் வேனற்பொழுதுகூட கங்கினுள் கழன்றுருகும் பொன்னாகவே மினுங்குகிறது. வெறும் நகைகளாக மட்டுமன்றி கஜலெக்ஷ்மி பதக்கத்துக்குள் ஆகாயமாகவும், புஷ்பராக கற்களின் அகவெளிக்குள் காலமாகவும் மாறும் வித்தைகளை நிகழ்த்துகிறது, தாணு பிச்சையா என்கிற கவிதைக் கொல்லன் வடிக்கும் பொன் கவிதைகள். துண்டுதுண்டாய் அறுபட்டு மீன்களோடு மிதந்த நீலம் பாரித்த தச்சனின் தசைககளையும், நள்ளிரவில் நடுங்கவைக்கும் ஆயிரம் பொற்கொல்லர் தலைகளின் பேரோலங்களையும் கவிதைகளுக்குள் கொண்டு வரும் போது தாணு பிச்சையா வாசகர்களுக்குள் கடத்தும் வலி இதுவரை அறியாதது.2006ல் வெளியான பிளட் டைமண்ட் என்கிற ஆங்கிலப் படத்தைப் பார்த்த போது ஒரு பெண் என்கிற முறையில் வைரம் எற்படுத்திய அசூயையும் குற்றவுணர்வையும் தாணு பிச்சையாவின் கவிதைகள் தங்கம் குறித்தும் எனக்குள் ஏற்படுத்துகின்றன.ஆனால் அந்த குற்றவுணர்விலிருந்து என்னை மீட்கும் சூட்சமத்தையும் தாணு பிச்சையாவின் கவிதைகளுள் சில கை கொண்டிருக்கின்றன. தேவதைகளின் அணிகலனாக சிமிக்கியை கொண்டாடும் போதும், பொற்பர வெளிக்கூண்டில் பறக்கும் கிளிகூண்டு சிமிக்கிகளை அணிந்தவளைப் பற்றி பாடும் போதும், முகமறியா பெண்ணின் சிமிக்கியில் நிழலாடும் அவளைப் பற்றி பேசும் போதும் கொல்லனுக்கேயுரிய அழகியலை வெளிப்படுத்துகிறது தாணு பிச்சையாவின் கவிதைகள். வரலாற்றில் எனக்குவாரி வழங்கியதன்மிச்சமெனஅரைஞாண்கயிறாய்இற்றுக்கிடக்குமிந்தமுப்பிரி நூல் மட்டுமே என்று துயரம் தோய பாடினாலும், தாணு பிச்சையாவிற்கு தாத்தா பொன்னை பழக்கிய காலத்திலிருந்து ‘காணும் யாவினுக்குள்ளும் மினுக்கத்தை’ தேடும் மனம் வாய்க்கப்பட்டிருக்கிறது.வெம்மை தணிய பாடும் கொல்லன், யுகங்கள் கடந்த நூற்றாண்டுகளின் மௌனத்தையும் கலைத்துக் கொண்டிருக்கிறான். தமிழ் கவிதைக்கு புதிய திசைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது,  இந்த கொல்லனின் பாடல்.

செம்மொழி மாநாட்டுக்குச் செல்லும் பேறு பெற்ற பத்து லட்சம் மக்களில், ஐநூறு ஊடகவியலாளர்களில் நானும் ஒருத்தி. மாநாட்டு தொடக்கவிழாவை மட்டும் பார்த்துவிட்டு அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் எனது அசல் திட்டம். அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தினேன். ஆனால் விதி வலியது. தொலைக்காட்சி ரூபத்தில் அது வந்தது. சென்னை வந்து சேர்ந்த அடுத்த நாள் மாநாட்டுக் கவியரங்கம் சன் நியூஸில் நேரடி ஒளிபரப்பு. தமிழச்சி கவிதை வாசிக்கவிருந்ததால் அதை பார்க்க முடிவு செய்தேன். அவருக்கு முன்பே கவிதாயினி கயல்விழி கவிதை வாசித்ததால் அதையும் கேட்க வேண்டியிருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றிய நகைச்சுவை ஒன்றைக் கேள்விப்பட்டிருந்தேன். தாத்தா கலைஞரின் பிறந்த நாள் விழாவில் கவிதை வாசித்த போது அதை எழுதிக்கொடுத்தவர் அவர் நிறுத்த வேண்டிய இடங்களைக் குறிப்பதற்காக ஸ்டாப் என்று எழுதியதாகவும் கயல்விழி அதையும் சேர்த்து வாசித்து விட்டதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். அதற்கு பிறகு உன் கவிதையை நீயே எழுது என்று தாத்தா சொல்லியிருப்பார் போலும். வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார் கயல்விழி. குறிப்பாக கலைஞரை கலைங்கர் கலைங்கர் என்று சொன்னார். கலைங்கர் திருவடி வணக்கம் என்றார்.

கொடுமை என்னவென்றால் கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலேறுவதற்கு முன்பு தயாநிதி மாறனின் தமிழை கேட்கும் பேறு பெற்றேன். ‘ஒலகத் தமிழ் மாநாடு’ என்று உரையைத் துவக்கியவரின் தமிழில் அத்தனை உச்சரிப்புப் பிழைகள்.

முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட எதோவொரு விழாவை தனக்குத் தெரிந்த தமிழில் குஷ்பு தொகுத்து வழங்கிய போது, குஷ்புவையும் தாண்டி தமிழ் தழைக்கும் என்று கமெண்ட் அடித்தாராம் முதல்வர். கயல்விழியையும் தயாநிதியையும் தாண்டி தமிழ் வாழும்தான். ஆனால் மாநாட்டுக்கு சுமார் நானூறு கோடி ரூபாயை செலவு செய்திருக்கும் கலைஞர் அதில் ஒரு சிறு பகுதியை செலவு செய்து மாநாட்டில் பேசவிருப்பவர்களுக்கு தமிழ் உச்சரிப்பு பயிற்சி கொடுத்திருக்கலாம்.

iஇது நான் எழுதியது. சில நண்பர்கள் சேர்ந்து நடத்தி வரும் ஊடகங்கள் பற்றிய பிளாகில் பதிவிடப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.

http://mediapaarvai.wordpress.com/2010/02/24/எது-ஒழுக்கம்/

ஆனந்த் (நன்றி: காலச்சுவடு ஜனவரி இதழ்)
காதல், வேதனை, உறவு, தனிமை, பிரிவு, பிரிவாற்றாமை, மௌனம், துயரம், நிராசை, ஸ்பரிசம், கனவுகள், கண்ணீர்த்துளிகள், வண்ணங்கள், இருள், ஒளி, இசை, இரவு, பகல், கடல், நிலவு, மழை, ரகசியங்கள், முத்தங்கள், சாவு, பறவை, பூனை, சொல், பேரன்பு, நித்யகல்யாணிப்பூ, இவையெல்லாம் கவிதாவின் கவிதையுலகில் உலவும், அதைக் கட்டமைக்கும் விஷயங்கள். கருத்துகள் மிகக் குறைவாகவும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் பெருமளவுக்கும் தொடர்ந்து ஊடாடுவது கவிதாவின் கவிதைகளின் பலம்.

சந்தியாவின் முத்தம்
(கவிதைகள்)

ஆசிரியர்:
கவிதா
பக்.: 64 விலை: ரூ. 45/-
முதற்பதிப்பு: ஏப்ரல் 2008
வெளியீடு:
காலச்சுவடு
669, கே.பி. சாலை
நாகர்கோவில் – 629 001

இயல்பாகவே பெண்மையின் பார்வைக் கோணமும் அவ்வாறான பார்வை சார்ந்த உணர்ச்சிகளும் உணர்வுகளும் பெருமளவுக்கு இருந்தாலும் இவரது கவிதைகள் பெண் கவிதை – ஆண்கவிதை என்ற பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டவை.

சுகத்துக்கும் சோகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் காதலின் வேதனை போக்கிவிடும் அதிசயத்தை இவரது கவிதைகள் கொண்டாடுகின்றன. மென்னுணர்வுகள் மனத்தில் புரியும் ஜாலத்தை எளிமையாகவும் நேரடியாகவும் அதேசமயம் அவற்றின் வீரியம் குன்றாமலும் சொல்லும் லாகவம் கவிதாவுக்குக் கைவந்திருக்கிறது. வேதனை மிகுந்த கணங்களில் எங்கிருந்தோ வந்து கசியும் அன்பு, அல்லது அவ்வாறான அன்பின் நினைவு, அந்த வேதனையை ஆற்றிவிடும் அற்புதம் ‘சந்தியாவின் முத்தம்’ கவிதையில் மண்விலக்கி வெளிவரும் துளிர்போல் வெளிப்பட்டிருக்கிறது.

‘ஆனால் சந்தியா தந்த முத்தம் /அவள் வாழ்க்கையின் மீது/மூழ்க வியலாத ஒரு கப்பலைப்போல/ மிதந்துகொண்டேயிருக்கிறது’

என்னும் வரிகள் மிக முக்கியமானவை. அது மூழ்கிவிடும் கப்பலாக இருந்தால் என்ன ஆகியிருக்கும்? வேறொரு சமயம் வேதனையில் ஆழ்ந்துபோகும் தருணத்தில் அது கிடைக்காமல் மனத்தின் ஆழத்தில் மூழ்கிப்போயிருக்கும். ஆனால் அந்த ஒரு முத்தம் அவளுக்கு எந்நேரமும் கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு ஆறுதலாக இருந்துகொண்டே இருக்கிறது. ‘மிதந்துகொண்டே இருக்கும் கப்பல்’ என்னும் பிம்பம் மறதி மறுத்த நினைவாக, மனத்தின் ஆழ் நிலைகளுக்குள் காணாமல்போய் விடாத ஒரு வாக்காக, எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஆறுதலின் சின்னமாக நிலைத்துவிட்டிருக்கிறது.

‘அபூர்வமான ஒரு தனிமையில்/உட்கார்ந்துகொண்டிருந்தோம்

என்று தொடங்கும் கவிதை, ‘நான் அவனுக்கு/சாவைப் பரிசளிக்க விரும்புகிறேன்/கத்தியின் மீது தலையணை/குவளைத் தேநீரில் ஒரு துளி விஷம்/மலைமுகட்டின் மீதொரு காதல் தருணம்/அல்லது/ஒரு/முத்தத்தின் மூலமாவது.’ என்று முடிகிறது.

சந்தியாவின் முத்தம் என்றென்றும் கிட்டும் ஒரு ஆறுதலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த முத்தம் சாவுக்கு ஒரு சாதனமாக இருக்கிறது. முத்தம் என்பதன் பல பரிமாணங்கள், அதன் முழுப் பிரிகையும் இவரது கவிதைகளில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன.

கவிதாவின் கவிதைகளில் கனவுகள் இன்னொரு முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன. பச்சைக் கனவுகள், வெள்ளைக் கனவுகள், கறுப்புக் கனவுகள், இளஞ் சிவப்புக் கனவுகள், பாதி உடைந்த கனவுகள், விபரீதக் கனவுகள்.

ஒரு பை நிறையக் கனவுகளை வைத்துக்கொண்டு/எதிர்ப்படும் எல்லோருக்கும்/பரிசளித்துக்கொண்டிருந்தாள் அவள் என்று தொடங்கி, அபூர்வமாய்த் தோன்றும் கறுப்புக் கனவொன்றை/தவறுதலாய் ஒரு குழந்தையிடம் அவள்/கொடுத்த போதுதான்/அந்த விபரீதம் நிகழ்ந்தது/கனவுகள் நிறைந்த/அவளது பை/களவு போனது/அவள் காணாமல் போனாள்/ஊர் இருண்டது என்று முடிகிறது.

குழந்தையிடம் கறுப்புக் கனவைத் தவறுதலாகக் கொடுத்தால் கனவுகளின் பை ஏன் களவுபோக வேண்டும்? அவள் ஏன் காணாமல்போக வேண்டும்? அதுமட்டுமின்றி ஊர் ஏன் இருண்டுபோக வேண்டும்? கறுப்புக் கனவு குழந்தையை என்ன செய்தது? கனவுகளின் பை இல்லாவிட்டால் அவள் இருக்க முடியாதா? கனவுகளின் வெளிப்பாடா அவள்? ஊரும் கனவுகளின் வெளித்தோற்றம்தானோ? அப்படியானால் ஊரும் அவளும் குழந்தைக்குள்தான் அடக்கமா?

கவிதாவின் கவிதைகளின் உறவும் அது தொடர்பான உசாவலும் அடிநாதமாகத் தொடர்ந்து இழைந்துகொண்டேவருகின்றன. உறவின் மறுபக்கம் இருப்பது யார் என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரா அல்லது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு ‘நீ’யா? குறிப்பிட்ட ஒரு நபரென்றால் அந்த நபரின் குணாதிசயங்களுக்கேற்ப உறவின் வாசனையும் இயல்பும் மாற்றம் கொள்ளாதா? ஆனால் இந்தக் கவிதைகளில் எந்த ஒரு நானும் எந்த ஒரு நீயும் கொள்ளும் உறவின் அடிப்படை இலக்கணங்களும் உள்ளியக்கங்களும் ஆழமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நானுக்கும் மற்ற ஒவ்வொருவரும் ஒரு நீதான். இங்கே பரிசீலிக்கப்படுவது காதல் என்ற பெயரில் பொதுவாக நடந்துவரும் விளையாட்டுகள் அல்ல. அனைத்து மனித உறவுகளும் காதல் என்னும் பின்னணியில் பரிசீலிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

இவரது கவிதைகளில் உறவு எவ்வாறு வண்ணம் மாறுகிறது என்று பார்ப்போம். கூடவே இரவின் நிறமும் பகலின் நிறமும்.

‘நீ வரும் வரை/என் உறவுகளின் நிறம்/கறுப்பாய்த்தான் இருந்தது/எப்படி நிகழ்ந்ததென்று/தெரியவில்லை/தனிமையின் அரண்களை மீறிய/தேவதூதனையொத்த/உனது வருகை

எனது இரவுகளுக்கு/வெளிர்நீல நிறத்தைத் தந்தது/உனது வருகை

எனது இரவுகளுக்கு/நீ தந்தாய்/இரண்டு வெண்ணிறச் சிறகுகளை

நான்/பறக்க யத்தனித்தபோது/நீ விலகிச் சென்றாய்

ஒரு/பைத்தியக்காரனின் கனவைப்போல/எல்லாம் முடிந்தது

எனது முந்தைய இரவுகளைப் போலவே/இப்போது

என் பகல்களும்/கறுப்பாய்த் தானிருக்கின்றன

தனியொரு உயிரின் வாழ்வனுபவத்தில் ஏற்படும் நிகழ்வுகள், உயிரனுபவத்தின் ஆழங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியத்தைத் தம்முள் கொண்டிருக்கின்றன. கவிதை மற்றும் பிற கலைகள் சார்ந்த முறைபாடுகள் இந்தச் சாத்தியத்தை உண்மையான அனுபவமாக ஆக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த அனுபவம் இங்கே பல கவிதைகளில் வெளியாகியிருக்கிறது. தனிமை என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். கவிதாவின் கவிதை உசாவலில் தனிமை முக்கியமானதொரு விஷயம். இந்த வரிகளைப் பாருங்கள்.

ஏதோ ஒன்று/எதற்காகவோ/என்னை அடையும்போது/நான் அதை/தனிமை என்னும்/சொல்லால் குறிப்பிட்டுச் சொல்லலாம்தான்/ஆனால் எனக்கு/நிச்சயமாகத் தெரிகிறது/அது தனிமை அல்ல/அது நான்தான்.

பொதுவாகத் தனிமை என்பதைத் தன்னை ஆட்கொள்ளும் ஒரு உணர்வனுபவமாகத்தான் கருதுகிறோம். ஆனால் பிறர் யாருமற்ற நிலையில் தான் மட்டும் இருக்கும்போது தன்னையேதான் தனிமை என்று பெயரிட்டு அழைத்துக்கொள்கிறோம் என்பது உண்மைதானே? ‘நான்’ என்னும் உள்ளுணர்வுதானே புறவயப்பட்டு விரிந்து நம்மைச் சூழ்ந்துகொள்கிறது?

பெருநகரத்தின் ஆயிரங்கால் மண்டபத்தின்…எனத் தொடங்கும் கவிதை மிகப் பெரியதொரு காலத் திரையின் பின்னணியில் வரையப்பட்டிருக்கும் ஒரு சித்திரமாக விரிகிறது.

மனிதப் பிரக்ஞையின் ஆழ்தளப் பிம்பங்கள் தனிமனத்தின் வழியாக வெளிப்பட நேர்ந்தாலும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. அங்கே காலம் காலமாக உறைந்து நிற்கும் அந்த பிம்பங்கள் ஒரு பொருளில் உயிருள்ளவை; காலத்துக்கு அப்பாற்பட்டவை. எந்த ஒரு நேரத்திலும் ஒரு பிம்பம் உயிரோட்டம் கொண்டு மேல் மனத்தை – மனிதனை – தீண்ட முடியும். தீண்டிவிட்டுப் போய் மறுபடி உறைந்து நிற்கக்கூடும். அவ்வாறான தீண்டுதல் நிகழும்போது மேல்மனம் மிகவும் வலிமையான பாதிப்புக்கு உள்ளாக முடியும். நிரந்தரமான மாற்றங்களோ அல்லது நீண்ட கால பாதிப்புகளோ நேர முடியும். இவ்வாறான ஒரு முறைபாடு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது.

இந்தத் தொகுப்பில் சில நீண்ட கவிதைகள் இருக்கின்றன. அவை கவிதாவின் அகவுலகம் எந்த அளவுக்குச் செறிவு நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன.

கவிதாவின் உலகம் எத்தன்மையது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் கவிதை இதோ:

எல்லாத் திசைகளிலும்/பறந்து பார்க்கிறது/இந்த/சிறு பறவை/வானத்தின் விரிவு/பார்த்து/வதைபடும்/அதன் சிறகுகள்

ஜன்னல் வழி/துண்டு வானம்/கொடுத்து/அதனிடம் கேட்கிறாய்/போதுமா என்று

கடல் கொள்ளும்/பெருந்தாகம்/தவிர/சில மழைத்துளிகள்/எப்படிப் போதும்?

நேரடியாகப் பார்க்க முடியாததைக் கண்ணாடியில் பிரதிபலித்துக்காட்டும் ஜாலத்தை நிகழ்த்துகிறது கவிதை. இவர் கவிதைகள் இம்மாதிரியான கண்ணாடியாகத் திகழ்கின்றன. உயிரோட்டமுள்ள பல சித்திரங்களைக் காட்டுகின்றன. இந்தக் கவிதைகளின் பின்னால் தெரியும் அகன்றதொரு சித்திரத்தைப் பார்க்கும்போது, கவிதாவிடமிருந்து மேலும் நல்ல கவிதைகள் தொடர்ந்து வருவது நிச்சயமான ஒன்றாகத் தோன்றுகிறது.

நீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது.

தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர் ஹமாம் சோப் விளம்பரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கட்டுரையின் ஹமாம் சோப்பு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ஹமாம் சோப் விளம்பரக் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையை கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பன குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோட விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விலையாடிககொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்ல இந்த சந்தேகம் எல்லாம் எங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை அடித்தபடி அவர் இப்படி சொல்கிறார்: “ஆட்டோவில் அந்த குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதை சொல்லும் போது அவர் கண்களிலும் உடல் மொழியிலும்வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.”

இப்படி நீள்கிறது அந்த கட்டுரை. என்னுடைய அதிர்ச்சிக்கு காரணம், அந்த விளம்பரம் மட்டும் அல்ல எனது சுரணையும்தான். அந்த விளம்பரம் தொடர்ந்து பல்வேறு தொலைகாட்சிகள் மூலம் எனது பார்வையை எட்டியிருந்தாலும், எனது கவனத்தை ஈர்க்கவில்லை. எனது சுரணையை கிளறவில்லை. அதை இங்கே வெட்கத்தினுடேயே பதிவு செய்கிறேன்.  அந்த விளம்பரத்தில் அந்த மனிதர் சொல்வது ‘கண்ட குழந்தைகளையா அல்லது அந்த குழந்தைகளையா’ என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். கண்ட குழந்தைகள் என்று சொன்னாலும் அது அப்பட்டமான சாதி வெறியே. ஆனால் அவர் ஒரு படி மேலே போய் மிகத் தெளிவாக அந்த குழந்தைகள் என்று தான் சொல்கிறார். மீனா மயில் எழுதியிருப்பது போல அருவருப்பாகத்தான் இருக்கிறது.

ஒரு சோப் விளம்பரத்தில் இவ்வளவு அப்பட்டமான சாதிய வெறியும் உள்ள அழுக்கும் வெளிப்படுமா என்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. தொடர்ந்து சிகப்பழகு கிறீம்களின் எல்லா விளம்பரங்களும் பெண்களையும் பொதுவாக கருப்பாக இருக்கும் மக்களையும் கூனிக் குறுக செய்வது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இப்படிப்பட்ட விளம்பரங்களையும் பொருட்களையும் நாம் புறக்கணிக்காத வரையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. எப்போதும் பனியன் அணிந்த பகட்டான தோற்றம் கொண்ட மேல்சாதி பிரதிநிதி யாராவது நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் நமது வீடுகளுக்கு வந்து தலித் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்க போகிறார்கள். நாம் என்ன செய்ய போகிறோம்?