361 டிகிரி சிற்றிதழில் வெளியான எனது கவிதைகள்..

Posted: செப்டம்பர் 26, 2011 in பகுக்கப்படாதது

நான்,
ஒற்றை முலை அரசி.

பெருமுலைகள் விதைகளாய்
விழுந்து
சூல் கொள்ளும்
என் நிலம்.

நீராலமைந்த என் கொந்தளத்தில்
விளையாடும்
முலை தொலைத்த சிறுமீன்கள்.

இல்லாத என் முலைகளுக்கு உண்டு,
ஓராயிரம் கதைகள் -

நெகிழ்ந்தவழிந்த ஒரு
கணத்தில்
பூமி பிளந்ததென்றும்
பின்னர்
பொன் பூவாய்
பூத்ததென்றும்.

சூல் கொண்ட என்
நிலத்தில்
விழுந்த முலைகள் எல்லாம்
பொன்பூவாய்
செழித்துயரும்.

எனினும்,
வருத்திக் கொண்டிருக்கிறது,
என்னை முலைகளற்றவளாக்கும்
இந்த
மூன்றாவது காதல்.
———
தண்டனைக்காலம்

சாட்சிகளோ

தேர்வுகளோ அற்று

விதிக்கப்பட்டது.

பிறகு,

குற்றப்பத்திரிக்கை எழுதினார்கள்.

இறுதியில்

புகார் வாசித்தார்கள்.

வரலாறு,

வெறும் புனைவு.

எனது தண்டனை,

ஊர் எரிந்த,

கொற்றவன் மாய்ந்த

வரலாறின்

பதிவிடப்படாத

கழிவு.

வரலாறுகள் மீளும் போது

அதன் மேன்மைகளை பேசிக்கொண்டிருந்தவர்கள்.

குருடர்களாகிறார்கள்.

அல்லது

ஊமைகளாக.

நானோ

கிள்ளியெறியப்பட்ட முலையின்

வீணடிக்கப்பட்ட ஒரு துளி தீயாகிறேன்.

இப்போதும்

சில கொலைகளை

செய்துக்கொண்டிருக்கிறேன்.

—————–

இப்போது பேசுவோம்.

முன்னொரு காலத்தில்
பேச முடியாமலும் பேச மறுத்தும்
விடுபட்டு போன வார்த்தைகள்
அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றன.
வர்ணங்கள் பூசி,
வாசனை திரவியங்கள் தெளித்து
அழகு குலையாமல் அடுக்கி
அந்த வார்த்தைகளை
அரங்கில் வைப்போம்.
முடிந்தால்
ஒரு விற்பனை பிரதிநிதியை நிறுத்தி வைப்போம்.
புதைக்கப்பட்டவர்களின் வரலாறுகளை எடுத்து
சாட்சிக்கு வைப்போம்.
முன்பு ஆதரவாக பேசியவர்களுக்கு எதிராகவும்
எதிராக பேசியவர்களுக்கு ஆதரவாகவும்
சொற்களை அடுக்கி வைப்போம்.
விற்பனை தந்திரங்களில் அதுவும் ஒன்று.
நிறமற்ற வார்த்தையின் மீதிருப்பது
கண்ணீரின் நிறமென்று
விளம்பரம் செய்வோம்.
குருதியின் நிறம் கொண்ட சொற்கள்
அரிதென்று சொல்லி அதிக விலை வைப்போம்.
யாராவது வருவார்கள்.
நாளை நமது வார்த்தைகள்
நம்முடையதாக இல்லாமல் போகலாம்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s