1. எனது உலகம்
முத்தங்கள் அற்றது.
தாயிடமிருந்து மகள் பெறும் முத்தமும்
காதலியிடமிருந்து காதலன் பெறும் முத்தமும்
யாரிடமிருந்தோ யாரோ பெறும் முத்தமும்
கானல் நீராகி
மின்னி மறையும்
எனது சுடுவனத்தில்.
அன்றும்
முத்தங்களை பரிமாறிக் கொள்ள முடியாத
இடைவெளி.
எனினும் முத்தத்துக்கு மிக அருகில்
ஒரு உரையாடலை
நிகழ்த்திக்
கொண்டிருந்தேன்.
இலக்கிலாமல் அலைந்து கொண்டிருந்த
எனது கோடிக் கணக்கான முத்தங்களில்
ஒன்று
காற்றின் தீவிரமான அசைவுகளின்
எதோ ஒரு கணத்தில்
உன் உதடுகள் மீது கவியும்.
அதே காற்றில் வீசப்பட்டு
நிராகரிக்கபட்டோ அல்லது
போய் சேராமலோ
அலையும்
வேறொரு முத்தம்
என்னிடம் வந்து சேரும்,
முத்தத்தைவிட
வசீகரமான ஒன்றாக.
——
2 . எனது எல்லைகளை
என்னிடமிருந்து
விடுவித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது ஆழங்களையும்.
எனது விரிவுகளையும்.
இன்னும் சிற்சிலவற்றையும்.
எல்லாவற்றையும் விடுவித்தது போக
என்னிடம் சில விடுதலைகள்
மிச்சமிருக்கின்றன.
தேவைப்படுகிறவர்கள்
பெற்றுக்கொள்ளலாம்.
———–
3.
உன்னைப் பார்க்கும்போது
பகிரவென
துண்டுக் காகிதங்களில்
சேர்த்து வைத்திருந்த
செய்திகளையும், சுவாரஸ்யங்களையும்
நேசங்களையும் நம்பிக்கைகளையும்
நீ பரிசாக தந்த
துரோகத்தின் நிழலில்
வீசிச் செல்கிறேன்.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு,
துரோகம் தனது நிழலை
மேலும்
படரவிடுகிறது.
———- நன்றி: அடவி, ஜூலை இதழ்.
அடவியில் படித்தேன்,நன்று !
கவிதை – 1
அன்பை அல்லது அன்பானவர்களின் அருகாமையை முத்தமாகப் படிமம் செய்திருக்கிறீர்கள், அன்புக்காக எந்த நிலையிலும் ஏங்கிக் கொடுக்கும் ஒரு உயிரின் பார்வையில் வடிக்கப்படுகிறது கவிதை, கூடுதல் சிறப்பு, மனிதனைத் தவிரவும் ஒரு தொடுதலுக்கும், வருடலுக்கும் காத்திருக்கும் சின்னஞ்சிறு உயிர்களுக்கும் இந்தப் படிமம் பொருந்தி வருவது. முத்தம் முழுமையாக மற்றொரு உயிரோடு சங்கமித்தலைச் சொல்கிறது மனித வாழ்க்கையில், ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு காதல் கடிதத்தை அல்லது பல நாட்கள் பிரிந்திருந்த தாயின் பிரிவை ஒரே ஒரு முத்தம் முழுமையாக்கி விடுகிறது.
வாழ்க்கையில் அழுத்தப்படுகிற மனித உணர்வுகளை முத்தங்களாய் உலவ விட்டிருக்கிறீர்கள், ஒவ்வொரு அழுத்தப்பட்ட உணர்வும், வாய்ப்புகள் வழங்கப்படாத சொற்களும் இவ்வுலகில் முத்தங்களாய் அலைவதை இந்த வரிகள் உணர்த்தி விடுகின்றன, சொல்லப்படாத அன்பு, புரிந்து கொள்ளப்படாத உணர்வுகள் இவை எப்படியும் ஒரு நாளில் ஒரு விபத்தாகவாவது சேர வேண்டியவர்களிடம் போய்ச் சேர வேண்டும் என்கிற நம்பிக்கையையும் கடைசியில் கொண்டு வருகிறது கவிதை.அப்படிச் சேருகிற போது அது எத்தனை அழகானதாக இருக்கும் என்று ஆவல் கொள்கிறது கவிதை, ஆற்றாமையில் துவங்கி, இருப்பைச் சொல்லிப் பின்பு, நம்பிக்கையை விதைத்து, வியப்பில் முடிகிறது கவிதை.
இது என்னுடைய மனம் உங்கள் கவிதையை உள்வாங்கி இருக்கும் ஒரு கோணம், இதை எழுதும் போது உங்கள் மனநிலையைச் சொன்னால் இன்னும் முழுமை பெறும் என்று நம்புகிறேன்.
கவிதை – 2
எல்லைகள் இல்லாத ஒரு பெருவெளியைச் சொல்கிறது மனித மனம், மனித மனம் வகுத்துக் கொண்டிருக்கும் எல்லைகளை, சமூகம் சொல்லிக் கொடுத்திருக்கும் எல்லைகளை, இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு எல்லையற்ற பெருவெளியில் இந்தப் பேரண்டம் தனது இருத்தலைக் கொண்டிருக்கிறது. உறவுகளின் எல்லை, சமூகங்களின் எல்லை, மொழியின் எல்லை, நாடுகளின் நிலவியல் எல்லைகள் என்று எல்லாவற்றையும் கோட்பாட்டு வழியாக உடைத்து எறிதலைச் சொல்கிறது கவிதை,
எல்லாவற்றையும் கடந்து ஒரு பெருவெளியில் சங்கமிக்கற போதும் இடைப்படுகிற உள்மனத்தின் எல்லைகள் சில உடைபடாமல் கிடப்பது கண்டு வரும் எரிச்சலில் அவற்றை ஏளனம் செய்கிறீர்கள், தேவைப்படுகிறவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்கிற வரிகள் பிரகடனம் என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும் அவை சமூகம் இட்டு வைத்திருக்கிற சில வேண்டாத, தேவையற்ற எல்லைகளின் மீதான உங்கள் பரிகாசம் என்பதை என்னால் உணர முடிகிறது.
இருப்பினும் அந்த எள்ளலை மிச்சமிருக்கிற அந்த விடுதலையின் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தி அதன் பின்னர் எள்ளலைக் கையாண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி முழுமையான பிரகடனம் என்று என்னால் இந்தக் கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. கவிதை துவங்குகிற உச்சகட்டக் கொந்தளிப்பில் தொய்வடைந்து கடைசி இரண்டு வரிகளில் வேகம் குன்றியது மாதிரியான ஒரு தோற்றத்தைக் கொடுப்பதே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
கவிதை – 3
இந்தக் கவிதை கொஞ்சம் ஆழமாக உளவியலுக்குள் செல்கிறது, சக மனிதனின் மீதான அன்பை, நட்பை தனக்கே முழுமையானதாக சொந்தம் கொள்ளத் துடிக்கும் இன்னொரு சக மனிதனின் ஆற்றாமையை, அழுகுரலைப் பதிவு செய்கிறது. மனித வாழ்க்கையின் வண்ணங்களை துண்டுக் காகிதங்களில் சேகரித்த செய்திகள் என்று கொண்டாடுகிறது மனம், கலவையான மனித உணர்வுகள் குவியும் புள்ளிகள் வெளியற்று நீள்கிறது. நம்பிக்கையின் இழப்பு துரோகம் என்று தூற்றப்படுகிறது, வாழ்க்கையின் வண்ணங்கள் முழுவதும் நீர்த்துப் போகிற நிழலாக அந்த நம்பிக்கை இழப்பு வெறுக்கப்படுகிறது. நம்பிக்கை துளிர்க்காதா? என்கிற எதிர்பார்ப்பும் தொடர்ந்து வாழ்வின் வண்ணங்கள் நீர்க்கையில் துரோகத்தின் நிழலாகப் படிமம் செய்யப்பட்டு முடிகிறது கவிதை.
இது கொஞ்சம் ஆபத்தான கவிதை. இந்தக் கவிதையின் தோற்றம் அல்லது வேர் பல்வேறு வாழ்க்கையின் முனையில்லாத கயிறுகளால் கட்டப்பட்டிருக்கிறது.
Lovely!!