எனக்குத் தெரியும். உனது பதற்றங்களில் நிறைந்திருப்பது பகிர முடியாத அன்பின் கனம். எரிமலயையொத்த தீவிரத்துடன் அது கனன்றுக் கொண்டிருக்கிறது. உனது கவனமான ஒத்திகைகளை மறுத்து ஒரு நாள் அது வெடித்து சிதறும். அப்போது சிறு வெளிச்சம் பரவும்.
April, 2010 க்கான தொகுப்பு
சம்மதம் என்கிறீர்கள். சந்தேகம் என்கிறீர்கள். சந்தர்ப்பவாதம் என்கிறீர்கள். எதிர்ப்பு என்கிறீர்கள். நீங்கள் சொல்ல மறந்த விளக்கங்கள் சில. மௌனம், ஒரு விடுபடல். உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் நான் பெறும் சுதந்திரம். என் மௌனம், சொல்ல முடியாதவற்றின் எண்ணற்ற சாத்தியங்கள். சமயங்களில் அது இயலாமையின் வெற்றுக் கேவல்.
தண்டனைக்காலம் சாட்சிகளோ தேர்வுகளோ அற்று விதிக்கப்பட்டது. பிறகு, குற்றப்பத்திரிக்கை எழுதினார்கள். இறுதியில் புகார் வாசித்தார்கள். வரலாறு, வெறும் புனைவு. எனது தண்டனை, ஊர் எரிந்த, கொற்றவன் மாய்ந்த வரலாறின் பதிவிடப்படாத கழிவு. வரலாறுகள் மீளும் போது அதன் மேன்மைகளை பேசிக்கொண்டிருந்தவர்கள். குருடர்களாகிறார்கள். அல்லது ஊமைகளாக. நானோ கிள்ளியெறியப்பட்ட முலையின் வீணடிக்கப்பட்ட ஒரு துளி தீயாகிறேன். இப்போதும் சில கொலைகளை செய்துக்கொண்டிருக்கிறேன்.