ராபியா பாஸ்ரி 700களில் ஈராக்கில் வாழ்ந்த ஒரு பெண் கவிஞர். முதல் சூபிக்களில் ஒருவராக இவர் இருக்ககூடும் என்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் வந்த இன்னொரு கவிஞர். தனது காலத்தின் முக்கிய மதத்தலைவர்களுக்கு குருவாக ராபியா இருந்தார் என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லாத காலத்தில் பக்தியின் வழி சுதந்திரத்தை அடைய முனைந்தார்கள் என்பதற்கு ஆண்டாள், மீரா, லல்லா போல ராபியாவும் ஒரு சான்று. மீரா, ஆண்டாள் போல தெய்வீக காதலை இஸ்லாத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர் என்று சொல்லப்படுகிறது. சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகள்.

எனது இறைவன், எனது கடவுள்
விழிகள் அமைதியை நாடுகின்றன,
நட்சத்திரங்கள் மூடிக்கொள்கின்றன.
சன்னமாக இருக்கிறது,
அதனதன் கூடுகளில் இருக்கும் பறவைகளில் ஒலிகள்.
அலைகளின் வாழும் அசுரர்களின் சப்தங்களும்.
மாற்றங்கள் அறியாத மிகப்பெரியவன் நீ.
நிலை மாறாத சமன் நீ.
மறைந்துவிடாத அழிவின்மை நீ.
அரசர்களின் கதவுகள் இப்போது தாழிடப்பட்டிருக்கின்றன,
அவற்றை படையினர் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உன்னை தேடி வருபவர்களுக்காக
உனது கதவுகள் திறந்திருக்கின்றன.
எனது கடவுளே,
இப்போது எல்லோரும் அவரவர் காதலர்களுடன் தனித்து இருக்கிறார்கள்.
நான் உன்னுடன் தனித்து இருக்கிறேன்.
———————————
நரகம் பற்றிய பயத்தில்
உன்னை வணங்கினால்
என்னை நரகத்தில் தீயிலிடு.
சுவர்கத்தின் மீதான ஆசையில்
உன்னை வணங்கினால்
சுவர்கத்தில் வைத்து என்னை பூட்டிவிடு.
உன்னை உனக்காக மட்டுமே
வணங்குவேனென்றால்
உனது முடிவில்லாத அழகை
எனக்கு மறுத்துவிடாதே..
———————————————
உன்னுடைய ஒரு பகுதி
எங்கே செல்கிறதோ
மீதி அங்கு வந்து சேரும்,
நேரத்தைப் பொறுத்து..
———————————-
நீ உன்னை ஒரு ஆசிரியன் என்கிறாய்
அதனால் கற்றுக் கொள்.
————————————-
நான் கடவுளை நேசித்துக் கொண்டிருக்கிறேன்.
சாத்தானை வெறுக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை.
——————————————-
ஒரு கையில் விளக்கையும்
மற்றொரு கையில் ஒரு வாளி தண்ணிரையும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
சுவர்கத்தை தீயிலிட்டு,
நரகத்தின் மீதான தீயை அணைக்கப் போகிறேன்.
கடவுளை நோக்கிப் பயணிப்பவர்கள்
திரை விலக்கி
உண்மையை பார்க்கட்டும்.
——————————————-
யாரையாவது திறக்கச் சொல்லி மன்றாடி
எவ்வளவு காலம்தான் திறந்த கதவை
தட்டிக்கொண்டிருப்பாய்?